அரியலூர் மாவட்டம் கோவிந்தபுத்தூர் சிவன் கோயிலில் சைவ சமயத்தினுடைய தேவார இலக்கியம் தொடர்பான முக்கியக் கல்வெட்டொன்று உள்ளது. இந்நாளிலே கங்காஜடாதீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் பெரியஸ்ரீவானவன்மாதேவி சது ர்வேதி மங்கலத்து ஸ்ரீீவிஜயமங்கலத்து மகாதேவர் கோயிலில் திருஞானசம்பந்தர் பாடிய
"வாழ்க வந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே"
என்ற மூன்றாம் திருமுறைப் பாடலொன்று இங்கு கல்வெட்டாய் வெட்டப்பட்டுள்ளது. இதேபோன்று திருவிடைவாசலில் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது. ஆனால் அப்பதிகம் தேவாரத் தொகுப்பில் இடம்பெறவில்லை. இக்கோவிலில் சம்பந்தரும், நாவுக்கரசரும் பதிகம் பாடியுள்ளனர். "கொள்ளிடக்கரை கோவந்தப்புத்தூரில் வெள்விடைக் கருள் விஜயமங்கையே" என அப்பர் பாடியுள்ளார். மேலும் இவ்வூரில் "திருத்தொண்டன் தொகையன் திருமடம்" என்ற மடம் அமைக்கப்பட்டு சைவநெறி வளர்க்கப்பட்டுள்ள செய்தியும் இக்கல்வெட்டில் உள்ளது.
இம்மடத்தை சிதம்பரத்தைச் சேர்ந்த கந்தாபரணர் என்பவர் பேரன் இடையாற்றுக்குடி சுப்பிரமணியசிவன் நிறுவியுள்ளார். இம்மடத்தில் வழிபாடு செய்வோருக்கும், ஸ்தானத்தார்களில் வாரிசு இல்லாமல் வயதான காலத்தில் நலிந்து கிடப்போருக்கு பராமரிப்பு செலவிற்கு இவர் பலரிடம் நிலம் வாங்கி மடத்திற்கு சேர்த்துள்ளார். மேலும் இவருக்கு பின்னர் இவரது சீடர்கள் இம்மடத்தை நிர்வகிக்கவும், அவர்களுக்கு வாரிசு இல்லையெனில் சிதம்பரத்திலிலுள்ள சந்தனமடமான திருத்தொண்டத் தொகையன் திருமடத்து மடாதிபதிகளால் நியமிக்கப்பட்டவர்கள் நிர்வகிக்க வேண்டுமென நிர்ணயம் செய்துள்ளார். மேலும் இம்மடத்துக்குரிய நிலங்களுக்கு யாரும் வரிவிதித்து வாங்கக்கூடாதெனவும், அவ்வாறு வாங்குவோர் சிவதுரோகிகள், குருதுரோகிகள் பட்டதண்டம் விதிக்கப்படுவார்கள், அதன்பின் அவர்கள் தங்கள் திரவியங்களுடன் ஊரைவிட்டு ஓடவேண்டுமென விதிகள் செய்துள்ளார். மூன்றாம் இராஜேந்திரனின் இரண்டாம் ஆட்சியாண்டைச் சேர்ந்த இவ்வரிய கல்வெட்டானது கோவிலின் இரண்டாம் பிரகாரத் தென்புறச் சுவற்றிலே நன்னிலையில் உள்ளது.
0 comments:
Post a Comment