புள்ளமங்கை - 2
கொற்றவை
புள்ளமங்கை கோயில் அர்த்த மண்டபத்தின் வடபுறச் சுவற்றிலே கோட்டச் சிற்பமாக பழையோள் என்று நாமழைக்கும் கொற்றவைச் சிற்பம் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கொற்றவைச் சிற்பங்களிலே காலத்தால் முந்தியதாக வல்லம் குடைவரைச் சிற்பத்தினை உரைக்கின்றனர். அதற்கும் முந்நூறு ஆண்டுகள் பிந்தைய புள்ளமங்கைக் கொற்றவையானது நம்மிடமுள்ள சிறந்த கொற்றவைச் சிற்பங்களிலேயொன்று. தலையில் கரண்ட மகுடமும், நெற்றியிலே நெற்றிப் பட்டமும், செவிகளிலே குண்டலங்களும், முதுகின் பின்புறமிரு அம்பறாத்தூணியும், எட்டுக் கைகளிலே ஐந்தினில் வில்லும், கேடயமும், மணியும், வாளும், சூலமும் ஏந்தி எஞ்சியவற்றில் முத்திரை காட்டி, மார்பிலே கச்சிட்டு மேலே முத்துமாலை அணிந்து இடையிலே ஆடை கட்டி, பெரிய எருமைத் தலையின் மேலே இடக்காலை நேர் நிறுத்தி வலக்காலை சற்றொடித்து அலங்காரக் குடையின் கீழே போர்க்கோலம் கொண்டு நிற்கின்றாள் கொற்றவை.
இவ்வன்னையின் பெயரை தொல்காப்பியமும் கலித்தொகையும் பரிபாடலும் உரைப்பினும், சிலப்பதிகாரத்திலே மதுரைக் காண்டத்தில் வரும் வேட்டுவ வரி தான் இவளது உருவை முதன் முதலாக நமக்கு எடுத்துரைக்கிறது. அக்குடிக் காப்பியம் உரைக்கும் கொற்றவையை கற்பனையில் விரித்தால் நாமடையும் உருவம் நம்மை மிரளச் செய்கிறது. சிலம்பு காட்டும் கொற்றவையின் கரண்ட மகுடமானது சிறிய பாம்பின் வடிவம் கொண்ட பொன் நாணால் கட்டப்பட்டு அதன் மேலே வலிய பன்றியின் கொம்பானது பிறை போன்று வைக்கப்பட்டிருக்கும். இங்கவையில்லை. வலிய புலியின் வாயைப் பிளந்து பெற்ற அதன் பற்களால் கோர்க்கப்பட்ட தாலி இங்கில்லை. சிலம்பின் கொற்றவை மார்பின் கச்சையென பாம்பினை முடிந்திருப்பாள். புலித்தோலையும் சிங்கத்தோலையும் இடை ஆடையாக்கி இருப்பாள். அவள் வில்லின் நாணும் வாசுகியாவாள். இங்கவையில்லை. கால மாற்றத்தில் இங்குள்ள கொற்றவையின் முகம் சற்று மங்கியுள்ளது. ஆயினும் தான் கொண்ட போர்க்கோலத்தினால் இச்சிற்பம் நம்மை மிரளச் செய்கிறது.


கொற்றவைக்கு இரு புறமும் தன்னுயிரைக் கொடை அளித்திடும் உயர்ந்தோர் இருவரின் சிற்பங்கள் உள்ளன. இவர்களைப் போன்ற உயர்ந்தோர் புரியும் செயல்களை, கலிங்கத்துப்பரணியில் கோயில் பாடியது எனும் பகுதியிலேயுள்ள
'அடிக் கழுத்தி னுடன் சிரத்தை அரிவராலோ;
அரிந்த சிரம் அணங்கின் கைக் கொடுப்பராலோ;
கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ;
குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ.'
என்ற 111 வது பாடல் எடுத்துரைக்கிறது. கோட்டச்சிற்பத்திற்கு வலப்புறம் மயிர்கள் படிந்த தலையும் சுழித்த வாலும் கொண்ட சிங்கமொன்றும் இடப்புறம் குள்ள பூதமும் அதனருகே நீண்ட கொம்புடன் கூடிய மானும் உள்ளன. கோட்டத்தின் மேலுள்ள மகர தோரணத்தில் உமையோடு இறைவன் காட்சி தருகிறார். சிற்பங்கள் தொடரும்.
0 comments:
Post a Comment