புள்ளமங்கை-3
யானைமுகத்தான்

இது தஞ்சை மாவட்டம் திருப்புள்ளமங்கை கோவிலின் அர்த்த மண்டபத் தென்புறச் சுவற்றிலே கோட்டச் சிற்பமாக வீற்றிருக்கிறது. இங்கே பூதங்களின் தலைவனான யானை முகத்தான் சிற்பமும் அவருக்கு சேவை செய்யும் பூதங்களின் சிற்பங்களும் சிறந்த வேலைப்பாட்டுடன் செதுக்கப்பட்டுள்ளன. கோட்டத்தின் உள்ளே இரு கந்தர்வச் சிற்பங்கள் ஒரு கையில் மலரும் மறு கையில் வாழ்த்துவது போன்ற முத்திரையும் கொண்டு தலைக்கு மேலிருந்து வாழ்த்த, நன்கலங்கரிக்கப்பட்ட முத்துத்தாமக் குடையின் கீழே, தாமரை பீடத்தின் மீது லலிதாசனத்தில் அமர்ந்திருக்கிறார் யானைமுகத்தான்.
லலிதாசனம் என்பது இரண்டு கால்களையும் பீடத்தின் மீது வைத்து, ஒரு காலை மடக்கிப் பீடத்தின் மீது படுக்கையாகக் கிடத்தி மற்றொரு காலை மடக்கி பீீடத்தின் மீீது நிறுத்தி அமர்ந்திருக்கும் ஒருவகை ஆசனம் ஆகும். நான்கு கைகள் கொண்ட யானைமுகத்தான், தலையிலே கரண்டமகுடமும், வலப்புறம் தந்தமின்றியும் இடப்புறம் உடைந்த தந்தமும், துதிக்கையிலே கொழுக்கட்டையும் கொண்டு காட்சி தருகிறார். பின்னே திருவாசி உள்ளது. வலமுன் கையில் கொழுக்கட்டையும் வலபின்கையில் உடைந்த தந்தமும் இடபின்கையில் மலர்த்தோகை போன்ற ஒன்றும் உள்ளன. இடமுன் கையானது வெறுமனே தொடையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளது. பின் கைகள் இரண்டும் கடக முத்திரை கொண்டுள்ளன.
கடக முத்திரை என்பது கைத்தலத்திலிருந்து பெருவிரலை நீட்டி உள்முகமாக சிறிது வளைத்து, நடுவிரலையும் மோதிர விரலையும் ஒன்றாக இணைத்து முன்னோக்கி வளைத்து, சுட்டு விரலையும் சுண்டு விரலையும் தனது இடங்களில் நிறுத்தி மேற்கணுக்களை சற்று வளைத்துப் பிடிப்பதாகும். இதில் நடுவிரலின் நுனியானது மோதிர விரலின் நுனியுடன் சற்று முன்னோக்கி அமைதல் வேண்டும். இம்முத்திரையின் புறத்தோற்றம் நண்டின் வடிவத்தை ஒத்திருக்கும். சிற்பங்களிலே ஆயதங்களைப் பெற்றிருக்கும் கைகள் பொதுவாக இம்முத்திரையைக் கொண்டிருக்கும். யானைமுகத்தான் கழுத்திலே முத்துமாலையும் உடலிலே குறுக்காக முப்புரிநூலும் இடையாடையும் காலிலே சிலம்பும் தரித்துள்ளார்.
யானை முகத்தான் சிற்பத்திற்கு இரு புறமும் கோட்டத்திற்கு வெளியே மூன்றடுக்கு கொண்டு, பக்கத்திற்கு நான்காக எட்டு பூதகணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோட்டத்திற்கு வலப்புற மேலடுக்கிலே பூதமொன்று வாயைப் பிளந்தபடி மெய்மறந்து இசைக்கருவிகளை வாசித்தபடி உள்ளது. அதற்கு நேரெதிரே இடப்புறமுள்ள சிற்பத்திலே மூக்கிலே நீண்ட கயிறு கட்டப்பட்ட எலியொன்றும், அக்கயிற்றின் நுனியை இடக்கையிலே கடக முத்திரை கொண்டு பிடித்தவாறு வலக்கையால் இறைவனிருக்கும் திசையைக் காட்டியபடி, காதிலே குண்டலங்கள் அணிந்த பூதமொன்றுள்ளது.
வலப்புற நடு அடுக்கிலே மேலுள்ள பூதத்தின் இசையைக் கேட்டு ரசித்தபடி ஒரு கையில் கடக முத்திரை காட்டி சாமரம் ஏந்தி வீசிக் கொண்டும் மறு கையில் வாழ்த்துவது போன்ற முத்திரையும் கொண்ட பூதமொன்று காட்சி தருகிறது. அதற்கு நேரெதிரே இடப்புறமுள்ள சிற்பத்திலே வலக்கையில் வாழ்த்து முத்திரை காட்டி இடக்கையில் கொழுக்கட்டை நிறைந்த பாத்திரம் ஏந்தி இசையினை ரசித்த வண்ணம் பூதமொன்றுள்ளது. இருபுறமுள்ள கீழடுக்கிலே பக்கத்திற்கு இரண்டு பூதங்களாக நான்கு பூதங்கள் இடம்பெற்றுள்ளன. வலப்புறமுள்ள இரு பூதங்களில் ஒன்று பலாப்பழம் போன்ற ஒன்றை அரிவது போன்றும் அதை மற்றொரு பூதம் இடக்கையில் ஒரு பழத்துடன் பார்ப்பது போன்றும் உள்ளது.
இடப்புறமுள்ள இரண்டு பூதங்களின் இடக்கைகளிலே பழங்கள் உள்ளன. அவற்றில் பின்னுள்ள பூதத்தின் வலக்கை மறைந்தும் முன்னுள்ள பூதத்தின் வலக்கையானது இறைவனைச் சுட்டுவது போன்றுமுள்ளது. இடப்புற மேலடுக்கிலுள்ள பூதத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து பூதங்களும், தலைகள் நன்கு அலங்கரிக்கப்பட்டும், உடலிலே குறுக்காக முப்புரிநூல் தரித்தும், லலிதாசனத்திலே அமர்ந்துள்ளன. கோட்டத்தின் மேற்புறத்தை யாளி வரியும் பூத வரியும் கொண்ட மகர தோரணம் அலங்கரிக்கின்றது. தோரணத்தின் நடுவே சண்டேச மூர்த்தியின் சிற்பமுள்ளது. இங்குள்ள இச்சிற்பக் காட்சி காண்பதற்கு அரிதான ஒன்றாகும்.

Excellent explanations.
ReplyDeleteVery many thanks.
Commander R Natarajan.