புள்ளமங்கை - 1

மங்கைக் கோயில்களில் இறுதியாக நாம் பார்ப்பது, கல்வெட்டுகளிலே கிழார்கூற்றத்து பிரம்மதேயம் புள்ளமங்கலத்து திருவாலந்துறையார் மகாதேவர் கோயில் என்றழைக்கப்படும் புள்ளமங்கைக் கோயிலாகும். சப்த மங்கைகளில் சாமுண்டி வழிபட்ட தலமாக இதைக் கருதுகின்றனர். இக்கோயிலானது தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 14 கி.மீ தொலைவிலுள்ள பசுபதி கோயிலுக்கு தெற்கே அமைந்துள்ளது. இந்நாளில் பிரம்மபுரிஸ்வரர் என்றழைக்கப்படும் இக்கோயில் இறைவன் கல்வெட்டுகளிலே ஆலந்துறை மகாதேவர் என்றழைக்கப்படுகிறார். ஆலம் என்பதற்கு நீர் என்றும் ஆலமரமென்றும் இருவிதமாகப் பொருள் கொள்ளலாம்.

முதலாம் பராந்தகர் காலத்தில் கட்டப்பட்ட நாகரபாணியில் அமைந்த கிழக்குப் பார்த்த கோயிலிது. கோயிலின் கருவறையும் அர்த்தமண்டபமும் சோழர் காலத்தியதாகும். முன் மண்டம், மகா மண்டபம், பிரகார மண்டபம், கோபுரம், பிற்காலத்தே கட்டப்பட்டது. முழுவதும் கல்லினால் ஆன, மூன்று தளங்கள் கொண்ட சதுர வடிவ விமானம் கொண்டது.
சேதமடைந்திருந்த விமானத்தின் சிகரத்தை பின்னாளில் செங்கற்சுதையால் கட்டியிருக்கின்றனர். கோயிலின் வடகிழக்கே பிரகார மண்டபத்தில் அம்மன் சன்னதியுள்ளது. இச்சன்னதி விசயநகர காலத்திற்கும் பிந்தையதாகக் கருதப்படுகிறது. இங்குள்ள இறைவியின் பெயர் அல்லியங்கோதை எனும் சௌந்தரநாயகி. கோயிலின் மேற்புரம் சுப்ரமணியர் சன்னதியும் வடப்புறம் சண்டிகேசர் சன்னதியும் அமைந்துள்ளன. முகமண்டபத்தின் வடபுறத்தேயுள்ள நடராசர் சன்னதியும் மூன்று தளம் கொண்ட வெளிக்கோபுரமும் பிற்காலத்தியதாகும்.
இக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
'பாலுந்துறு திரள்ஆயின பரமன்பிர மன்தான்
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.'

என்பதை முதல் பாடலாகக் கொண்டு, திருஞானசம்பந்தரால் தேவாரத்தின் முதல் தொகுதியிலே பதினோறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. தேவாரப் பாடலிலே இவ்வூர் திருப்புள்ளமங்கை என்றும் இறைவன் ஆலந்துறை மகாதேவர் என்றும் குறிக்கப்படுகிறார். திருஞானசம்பந்தர் இவ்வூரைக் காவிரிக் கரையில் அமைந்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகவே குறிப்பிடுகின்றார். இக்கோயில் சிற்பங்களின் சிறப்பையும் இங்குள்ள கல்வெட்டுகள் உரைக்கும் செய்திகளையும் அடுத்தடுத்த பகுதிகளில் காணலாம்.
0 comments:
Post a Comment