Thursday, March 29, 2018

புதுக்கோட்டைக்குடைவரைகள் - 2

ஆய்ங்குடி குடைவரை: புதுக்கோட்டை


திருமயத்திலிருந்து அரிமழம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ தொலைவில் இராயவரம் என்னும் ஊர்  அமைந்துள்ளது. ஊரிலிருந்து மேற்கே சுமார் ஒரு கி.மீ தொலைவில் நகரத்தார்களின் மாளிகை போன்ற இல்லங்களை கடந்தால் ஆய்ங்குடி மலைக்கொழுந்தீசுவரர் எனும் பெயர் கொண்ட இறைவனைக் காணலாம். விவரமறியாது சாதாரணமாக செல்பவர்கள் இதை குடைவரை என்றறிய மாட்டார்கள். அந்தளவிற்கு வேலைப்பாடு செய்து, கோவிலின் முண்மண்டபத்தை தற்கால கான்கிரீட் பூச்சில் எழுப்பியுள்ளனர். தற்போது இக்குடைவரை ராமசாமி செட்டியார் மண்டபம் என்றழைக்கப்படுகிறது. திரு. கலைக்கோவன் அய்யாவின் புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள் என்ற புத்தகத்திலே இக்குடைவரை குறித்து படித்தறிந்ததாலேயே இதை எங்களால் குடைவரை என்று உற்று நோக்க முடிந்தது.   கோவிலை வெளிப்புறம் முழுதாக சுற்றிவந்தால் தான் இது ஒரு குடைவரைகோவில் என உணர முடியும். ஒரு சிறிய குன்றில் கருவறையை அகழ்ந்துள்ளனர். கருவறை தரையில் ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை போன்ற உறுப்புகளுடன் குடைவரை குடையப்பட்டுள்ளது. தாய்ப்பாறையில் எண்கோண வடிவ ஆவுடையாரில் லிங்கம் செதுக்கப்பட்டுள்ளது.
பிற்காலச் சேர்க்கையாக வெளிச்சுற்றில் இறைவி மங்களநாயகி அமைந்துள்ளார். மேலும் வள்ளி, தெய்வானை சமேத முருகன், விநாயகர், கொற்றவை மூர்த்தங்களும் உள்ளன. பாறைச்சுவற்றில் தமிழ், தெலுங்கு கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. நாங்கள் சென்ற சமயம் அங்கே விழா நடந்து கொண்டிருந்ததால் அதனை ஊன்று படிக்கும் வாய்ப்பு அமையவில்லை.

0 comments:

Post a Comment