சமீபத்திய தேடலின் போது சோழ வரலாற்றினை உரைக்கும் கல்வெட்டுகளில் முக்கியமான இரண்டு கல்வெட்டுகள் அழிந்திருக்கக் கண்டோம்.
சப்தவிடங்க தலங்களில் இரண்டாவதும், தேவாரம் பாடல்பெற்ற தலங்களில் நூற்றிஇருபத்தைந்தாவது தலமுமான திருமறைக்காடு எனும் வேதாரண்யத்திலே, முதலாம் ஆதித்தன் துவங்கி மூன்றாம் ராஜேந்திரன் வரையில் கிட்டத்தட்ட 50 கல்வெட்டுகளுக்கும் மேல் படியெடுக்கப்பட்டிருக்கின்றன. இன்று இக்கோவிலில் சில கல்வெட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. மறைந்த கல்வெட்டுகளில் இரண்டு முக்கிய கல்வெட்டுகளும் அடங்கும். அவையாவன,
முதல் கல்வெட்டு :
"கோப்பரகேசரி" என்றும் "மதிர கொண்ட கோப்பரகேசரி" என்றும் துவங்கும் பராந்தகரின் கல்வெட்டிற்கு மாறாக " மதின் மதுரை சிதைத்த" என்று துவங்கும் கல்வெட்டிது. இக்கல்வெட்டின் ஏழாம் வரியினில் "சிங்களர் கொன்றன்னை" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கும் காணவியலாத இவ்வரிய கல்வெட்டானது கோயிலின் கருவறை முன்பண்டபத்திலுள்ள நான்காம் தூணிலே வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டானது தூணில் தேங்கிய அளவிற்கதிகமான எண்ணெய் படலத்தால் பாழாகி எழுத்துகள் படிக்க இயலாத நிலையில் உள்ளது. மிகுந்த சிரமப்பட்டு தேடியதில் "சிங்களர் கொன்றனை" என்ற வரிமட்டும் தென்பட்டது, ஏனைய வரிகள் தூர்ந்துபோய்விட்டன. அக்கறையோடு சுத்தம் செய்தால் கொஞ்சமேனும் இக்கல்வெட்டு பிழைக்கக் கூடும்.
இரண்டாம் கல்வெட்டு :
சோழப்பேரரசின் கடைசி கல்வெட்டான மூன்றாம் இராஜேந்திரரின் 33 ம் ஆட்சியாண்டு கல்வெட்டிது (1279). முக்கியமான கல்வெட்டென்று தனியாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழக வரலாறறியும் மாணவர்களையெல்லாம் அழைத்துக் காட்ட வேண்டிய இக்கல்வெட்டினை இன்று நாமிழந்துவிட்டோம். திருச்சியில் இருந்து எதைத்தேடி ஆர்வமுடன் பயணித்தோமோ, அக்கல்வெட்டின் சுவடைக் கூட காணாது திரும்பிவிட்டோம். கல்வெட்டுகளின் பிரதியையும், அழிந்து போன இடத்தையும் இணைத்துள்ளோம்.
கல்வெட்டுத் தகவல்கள்:
தென்னிந்திய கல்வெட்டு சாசனங்கள் Volume:17, (page 445-545)
0 comments:
Post a Comment