
பராந்தகரின் மகன்கள் நால்வரில் ஒருவர் உத்தமசீலி. இவர் குறித்த கல்வெட்டுகள் மிகவும் அருகியே காணப்படுகின்றன. இவரைக் கொன்றுதான் வீரபாண்டியர் "சோழன் தலை கொண்ட கோவீரபாண்டியன்" எனப் பெருமையுடன் தன்னை அழைத்துக் கொண்டார் என்று வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர். இவர் பெயரில் திருச்சி அருகே உத்தமசீலி சதுர்வேதி மங்கலம் என்ற ஊருள்ளது. காவிரி தென்கரை பாடல்பெற்ற தலங்களில் ஒன்றான திருப்பாற்றுறையில் இச்சதுர்வேதி மங்கலம் குறித்த குறிப்புண்டு. நாங்கள் இதுவரை கிடைத்த கல்வெட்டு தரவுகளை ஆராய்ந்து பார்க்கையில், திருவிடைமருதூர், கண்டியூர், குற்றாலம் என்ற மூன்று இடங்களில் மட்டுமே இவர் நேரடியாக நிவந்தம் கொடுத்த கல்வெட்டுகள் உள்ளதாக கருதுகிறோம். (மேற்கொண்டு இருப்பின் நண்பர்கள் தெரிவிக்கவும்)
இவற்றில் திருவிடைமருதூர் கல்வெட்டு புணரமைப்பில் காணாமல் போய்விட்டது. குற்றாலத்தில் நிலைமை தெரியவில்லை. எஞ்சியிருப்பது கண்டியூரில் உள்ள கல்வெட்டு. இக்கல்வெட்டின் இன்றைய நிலையை பார்ப்போம். கண்டியூர் சிவன் கோயில்

கருவறையின் கிழக்குப்புறச் சுவரில் உள்ள இவ்வரிய கல்வெட்டை, கிட்டத்தட்ட 3mm அளவிற்கு சுண்ணாம்பு பூசி அழகுபடுத்தி இருக்கின்றனர். (😏😏) அதை தேடி கண்டுபிடிக்க வெகுநேரம் பிடித்தது. கையில் கல்வெட்டின் நகல்வைத்து தேடும்போதே இந்நிலையெனில், புதிதாக வருவோர் தேடிப் படிப்பது கடினம் தான். இக்கல்வெட்டின் வடபுறம் "வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி" கல்வெட்டும் உள்ளது. என்ன வெஞ்சினமோ? கல்வெட்டின் நகலையும் அசலையும் இணைத்துள்ளோம் பாருங்கள்.
0 comments:
Post a Comment