Friday, March 2, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 1



வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சில கல்வெட்டுகளை பதிப்பித்த புத்தகங்களில் மட்டும் நாம் படித்தறிந்து கொண்டிருக்கிறோம்.  அவ்வாறான கல்வெட்டுகளை  நேரில் சென்று கண்டு அதைச்  சரிபார்த்து அதன் இன்றய நிலையினை ஆவணப்படுத்தும் சிறு முயற்சி இது.
முதலாவதாக காவிரி தென்கரைத் தலமான தில்லைஸ்தானத்தை அறிவோம். இக்கோவிலில் மொத்தம் 65 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. முதலாம் ஆதித்தனின் கட்டுமானக் கோவிலாகிய இதில் பல முக்கிய கல்வெட்டுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

கல்வெட்டு:1


1.ஸ்வதிஸ்ரீ தொண்டைநாடு பாவின சோழன் பல்
2.யானைக் கோக்கண்டனாஇன ராஜகேஸரிவந்மரான
3.லுஞ் சேரமான் கோத்தாணு இரவி(யா)லுந் விசுஞ் சா
4.மரையுஞ் சிவிகையுந் திமிலையுங் கோயிலும் போனக
5.முங் காளமுங் களிற்று நிரையுஞ் செம்பியன்றமிழ வேளெ
6.ன்னுங் குலப்பியரும் பெற்ற விக்கி அண்ணன் றேவிவான
7.கடம்பமாதேவி திருநெய்தானத்து மகாதேவர்க்கு நந்தாவிளக்க
8.னுக்குக் குடுத்த ஆடு

இக்கல்வெட்டு முதலாம் ஆதித்தனின் கோக்கண்டன் என்ற சிறப்பு பெயரையும் சேரஅரசன் தாணுரவியின் பெயரையும் சுட்டும் சிறப்பான கல்வெட்டு.
ஆதித்தனின் தொண்டைமண்டல வெற்றியை குறிக்கும் ஒரே கல்வெட்டும் இதுவே.  மேலும் சேர,சோழ மன்னர்களால் செம்பியன் தமிழவேள் என்ற பட்டத்தையும், ஆசனம், சிவிகை, திமிலை போன்ற சிறப்பு சின்னங்களையும் பெற்ற விக்கியண்ணனின் மனைவி கடம்பமாதேவி விளக்கெரிக்க நூறு ஆடு கொடுத்ததும் அறிய முடிகிறது. இவை தென்னிந்திய கல்வெட்டு பதிப்பில் உள்ளது. படியெடுக்கும்போது முழுதாக இருந்த இக்கல்வெட்டை,சில காலம் முன்னர் நடந்த கோயில் புணரமைப்பின் போது எடுக்கப்பட்ட புதிய அறையின் சுவரானது இரண்டாகப் பிரிக்கின்றது. குறுக்குவெட்டாக கொண்டால் கல்வெட்டின் முன் பகுதி படிக்கவும் இடைப்பகுதி சுவரால் அழிந்தும் கடைப்பகுதி அறையில் மறைந்துமுள்ளது. இன்று நீங்கள் இதை முழுதாகப் படிக்க இயலாத நிலையுள்ளது.

கல்வெட்டு 2:



1.ஸ்வதிஸ்ரீ கோவிராஜகேஸரிவனன்மருக்கு யாண்டு அ ஆவது சோழப்
2.பெருமானடிகள் மகனார் ஆதித்தன் கன்னரத்தேவன் திருநெய்த்தானத்
3.து மஹாதேவர்க்கு ஒரு நொன்தாவிளக்கு சந்திராதித்தவல் எரிப்பதற்க்கு கொடுத் 
4 .தபொன் உய இருபதின் கழஞ்சு இப்பொன் கொண்டு எரிப்போநோம்
5.திருநெய்த்தானத்து ஸபையோரும் ஊரோரும் இவ்விளக்கு  பண்மாஹேரான ரக்ஷை

இக்கல்வெட்டானது கோவிலின் கருவறை தெற்குச்சுவரில் உள்ளது. இதில் முதலாம் ஆதித்தனின் மகனாகிய இளவரசர் கன்னரத்தேவன் திருநெய்த்தான மஹாதெவர்க்கு இருபது கழஞ்சு பொன்னளித்து ஒரு நொந்தாவிளக்கு எரிக்கச்செய்தமை குறித்த குறிப்புள்ளது.  இதனை சபையோரும் ஊராரும் ஏற்றனர்  என்பது இதன் சாராம்சம்!
கன்னரதேவன் முதலாம்பராந்தகனின் சகோதரராவார். இவர் குறித்த கல்வெட்டு மிகவும் அரிதானவை.  அதில் இதுவும் ஒன்று. இக்கல்வெட்டு நன்னிலையிலுள்ளது.

கல்வெட்டு 3:


1.ஸ்வதிஸ்ரீ கோராஜகேஸரிவந்மருக்கு யாண்டு யங ஆவது பொய்கை நாட்டுத்
2.தேவதானத் திருநெய்த்தானத்து மஹாதேவர்க்கு தென்னவன் வீரா
3.தி மாராசானாயின கட்டி ஒற்றிஊரன் நிசதி உழக்கு நெய்யாலே நொந்தாவிள
4.க்கெரிவதாக கொடுத்த பொன் உயரு உம் பராந்தகவிளங்கோ மஹாதேவியா
5.ர் வரகுணபெருமானார் ஒருநொந்தாவிளக்குக்கு கொடுத்த பொன் உயரு...........
6.....தேவர் நிலன் கறையுந் திடலில் கல்லி நீர்நிலமாக மசக்கின நிலத்து(க்)
7.கெல்லைக் கரைகீழ் விஷீ....... கர்துடவைக்கு மேர்க்குங் "கரிகாலக்கரை"க்கு வடக்குந் தேவருடை
8.ய புன்செய் கறாய்க்கு கிழக்கு மந்தனூர் வாய்க்காலு தெற்குஇம்மிசைந்த பெருநா
9.ன்கெல்லையுள்ள பட்ட நிலம் செ பத்துச் செய்யுங் கொண்டு நிசதியிரண்டு நொந்தாவிள
10.க்கு சந்திராதித்தவல் எரிப்போமெனந் திருநெய்தானத்து ஸபையும் பாதமூலமிது

முதலாம் ஆதித்தசோழனின் கல்வெட்டு இது.
திருநொந்தாவிளக்கெரிக்க பிரம்மாதிராயன் ஒற்றியூரான் கட்டி என்பவனும் பராந்தக இளங்கோவேளாரின் மனைவி வரகுணபெருமாட்டி என்பவரும் அளித்த கொடையைக் குறிக்கின்றது.
இக்கல்வெட்டின் தலையாய சிறப்பென்னவெனில்,  கரிகாலக்கரை என்று ஆற்றின் கரையை இது குறிப்பிடுகின்றது. காவிரிக்கு கரிகாலன் கரையெழுப்பினான் என்பதை சங்ககாலப் பாடலினால் அறிகிறோம். அதைக்குறிக்கும் விதத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான முதலாம் ஆதித்தன் காலத்திலும் காவிரிக்கரையானது கரிகாலக்கரை என்று வழங்கப்படுகிறதென்றால் அது  முக்கியத்துவம் வாய்ந்தது தானே. மேற்ச்சொன்ன அந்தப் புதிதாக எழுப்பிய  அறையில் இக்கல்வெட்டும் மறைந்துபோனதைச் சென்றால் பார்க்கலாம். 

0 comments:

Post a Comment