
இன்று நீங்கள் திருப்பணி செய்யப்பட்ட கோயில்களுக்குச் சென்றால், அங்கே முன்னர் இருந்த பழைய கல்வெட்டுகளானது அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டோ அல்லது அதன் மேல் வண்ணம் அடிக்கப்பட்டோ அல்லது அவைகள் துண்டு துண்டாகவோ இல்லை தலைகீழாகவோ வெவ்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருப்பதை காணலாம். நமக்கின்றைக்கு இருக்கும் வரலாற்று விழிப்புணர்வு இந்நிலையிலேயே உள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட கோயில் திருப்பணியைக் குறிக்கும் இரண்டு கல்வெட்டுகள் அன்றைய அரசின் வரலாற்றுப் பார்வையை எடுத்துரைக்கின்றன. அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாதசுவாமி திருக்கோயில் கருவறையின் தென்புறச் சுவரிலே இக்கல்வெட்டுகள் உள்ளன.இக்கல்வெட்டுகளுள் ஒன்று, அந்நாளில் கீலகமாகியிருந்த இக்கோயிலை பிரித்துக் கட்டவும் அவ்வாறு கட்டுவதற்கு முன்னர் இக்கோயில் விமானச் சுவரிலுள்ள கல்வெட்டுகளை படியெடுத்து வைக்கவும் மேலும் இக்கோயில் திருப்பணியில் யார்யாருக்கு என்னென்ன பொறுப்பு என்பதையும் உரைக்கும் முதலாம் இராஜராஜனின் 28ஆம் ஆட்சியாண்டுக் (பொயு 1013) கல்வெட்டாகும். மற்றொன்று, மேற்சொன்ன கல்வெட்டு ஆணையின்படி கோயிலானது பிரித்துக் கட்டப்பட்டு, முன்னர் படியெடுக்கப்பட்ட பழைய கல்வெட்டுகளை விமானச் சுவற்றிலே மீண்டும் எழுதியதைக் குறிக்கும் முதலாம் இராஜேந்திரனின் 14ஆம் ஆட்சியாண்டுக் (பொயு 1026) கல்வெட்டாகும். சுமார் 14 ஆண்டுகள் திருப்பணி நடைபெற்றுள்ள இக்கோயிலில் இவர்களுக்கு முன்னர் 150 ஆண்டுகாலமாக ஆண்டிருந்த மன்னர்களின் கல்வெட்டுகளைப் படியெடுத்து இவர்களின் காலத்திலே மீண்டும் எழுதி முந்தைய வரலாற்றைப் பேணியிருக்கின்றார்கள். இதற்காக மொத்தம் 23நபர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். இவ்விரண்டு கல்வெட்டுகளில் இராஜேந்திரனின் கல்வெட்டு முழுதாக படிக்கும் படியும் அக்கல்வெட்டின் முடிவிலே துவங்கும் இராஜராஜனின் கல்வெட்டானது பின்னர் எழுப்பப்பட்ட மண்டபச் சுவரால் பாதி மறைக்கப்பட்டு முழுதாக படிக்க இயலாத நிலையிலுமுள்ளது.
முழுதான தகவல்கள்:
1. SII Volume 5: No. 651 & 652
2. அரியலூர் மாவட்டக் கல்வெட்டுகள், செப்பேடுகள் (தொகுதி 2) - டாக்டர்.இல.தியாகராஜன்
0 comments:
Post a Comment