Friday, March 9, 2018

மங்கைக்கோயில்கள் - 1

சக்தியின் ஏழு வடிங்களான பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, மகேந்திரி, சாமுண்டி என்ற சப்த மங்கைகள் தனித்ததனியே சிவனை வழிபட்ட தலங்களை மங்கைக் கோயில்கள் என்று வழிபடுகிறோம். புராணங்களில் இது குறித்து பல கதைகள் இருப்பினும் அவைகளில் அந்தகாசுரன் கதையும், மகிசாசுரன் கதையும் முதன்மையாகச் சொல்லப்படுகின்றன.  தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச் சுற்றியுள்ள சக்ரமங்கை, அரிமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை என்கின்ற ஏழு கோயில்களை மங்கைக் கோயில்கள் என்றழைக்கிறோம். அவைகள் குறித்து இனி காண்போம்.


சக்ரமங்கை:



சக்கரபள்ளி எனும் ஊரில் அமைந்துள்ள இக்கோயிலானது சப்த மங்கையரில் முதலாமவளான பிராமி சிவனை வழிபட்ட தலமாகும். பிராமி நான்கு முகமும் நான்கு கைகளும் கொண்டு பிரம்மாவின் அம்சமாகத் திகழ்பவள். அன்னப் பறவையை வாகனமாகக் கொண்டவள். தத்துவார்த்தமாகப் பார்த்தால் பிராமி கலையின் குறியீடு. திருஞானசம்பந்தர் இத்தலத்தை வழிபாடு செய்து, கொல்லிப் பண்ணிலே 'படையினார் வெண்மழுப் பாய்புலித் தோல்அரை' என்று தொடங்கும் பதினொரு பாடல்களைப் பாடியிருக்கிறார். இப்பாடல்கள் மூன்றாம் திருமுறைத் தேவாரத்திலே 27வதாக வைக்கப்பட்டுள்ளன. 

இக்கோயில் இறைவன் பெயர் சக்கரவாகேஸ்வரர். இறைவி தேவநாயகி. தல விருட்சம் வில்வம். தீர்த்தம் காக தீர்த்தம். அம்மன் சன்னதி தனியே உள்ளது.  கோயில் கருவறையின் வெளிப்புறக் கோட்டச் சிற்பங்களாக தென்புறச் சுவரிலே தென்முகக் கடவுளும், மேற்கே அடி முடி காணா அண்ணலும், வடபுறச் சுவரிலே படைப்போனும் உள்ளனர். அர்த்த மண்டப கோட்ட சிற்பங்களாக தென்புறம் குடை கொண்ட விநாயகரும், வடபுறச் சுவரிலே உமாமகேஸ்வரியும் உள்ளனர். உமாமகேஸ்வரிக்கு அருகே சண்டிகேசருக்கு தனி சன்னதியுள்ளது.

கண்டராதித்தரின் மனைவியாகிய செம்பியன் மாதேவியால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயிலின் கருவறை அர்த்தமண்டபத் தென்புறச் சுவரிலே, உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தில் இத்தேவியால் அழிக்கப்பட்ட அறக் கொடைகள் குறித்து பேசும் கல்வெட்டுள்ளது. அக்கல்வெட்டிற்கு நடுவே சிறிய மாடமொன்று குடையப்பட்டு, அம்மாடத்தின் ஒருபுறம் மேலே குடையும், இருபுறமும் சாமரமும் விளக்கும் கொண்ட மாலையணிந்த சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. மறுபுறம் கையில் மாலையேந்திய தோழியோடு இரு கரம் கூப்பி லிங்கத்தை வழிபடும் பெண்ணின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இப்பெண்சிற்பத்தை செம்பியன் மாதேவியென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இங்குள்ள முதலாம் ராஜராஜனின் கல்வெட்டொன்றிலே சுந்தர சோழரைப் 'பொன் மாளிகைத் துஞ்சின தேவர்' என்றழைக்கும் சொற்றொடர் வருகிறது. மேலும் இக்கோயிலில் முதலாம் ராஜேந்திரனின் கல்வெட்டுகளும், முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டும், விஜயநகர அரசு காலத்திய கல்வெட்டும் உள்ளன.  கருவறைக்கு வெகு தொலைவாக நுழைவாயிலுக்கு அருகே நந்தி உள்ளது.  ராஜகோபுரமில்லா கோயிலிது.





0 comments:

Post a Comment