Saturday, March 17, 2018

மங்கைக்கோயில்கள் - 2

அரிமங்கை


மங்கைக் கோயில்களில் இரண்டாவது அரிமங்கை. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து தென்மேற்கே 1 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது. இந்நாளில் போக்குவரத்து வசதியற்ற ஒரு குடியிருப்பு பகுதியாக உள்ள இவ்விடம் அந்நாளில் கிராம சபை கொண்ட பெரிய ஊராக இருந்துள்ளது. சக்கரப்பள்ளியில் உள்ள சோழர் காலக் கல்வெட்டொன்றில் உள்ள "கிழார்க்கூற்றத்து பிரம்மதேயம் அகழிமங்கலத்து ஸபையோம் எங்களூர் திருச்சக்கரபள்ளி" என்ற வரியிலிருந்து கிராமசபை கொண்ட அகழிமங்கலத்தின் ஒரு பகுதி சக்கரபள்ளி என அறிகிறோம். இவ்வகழிமங்கலமே காலப்போக்கில் மருவி இன்று அரிமங்கை ஆகியுள்ளதாக திரு.செல்வராஜ் ஐயா உரைக்கிறார். இக்கோயில் இறைவன் அரிமுக்தீஸ்வரர். இறைவி ஞானாம்பிகை. சப்த மங்கையரில் ஒருவரான மகேஸ்வரி வழிபட்ட தலமிது. மகேஸ்வரி சிவனின் அம்சமாவார். ரிசபத்தினை வாகனமாகக் கொண்டவர். இக்கோயிலானது இன்று முற்றிலும் புதியதாகக் காட்சியளிக்கிறது.

சூலமங்கை


"நறையூரில் சித்தீச் சரம்நள் ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை
தோணி புரம்துருத்தி சோமீச் ச(ர்)ரம்
உறையூர் கடல்ஒற்றி யூர்ஊற் றத்தூர்
ஓமாம் புலியூர் ஓர்ஏட கத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப் பூரும்
கயிலாய நாதனையே காணல் ஆமே."

என்ற திருநாவுக்கரசரின் திருத்தாண்டகப் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக உள்ளது. தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் அய்யம்பேட்டையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் கருவறைக்கு முன்பாக சூலதேவர் சிலையொன்றுள்ளது. மூன்றாம் குலோத்துங்கன் கால கல்வெட்டில் இக்கோயில் இறைவன் பெயர் கரி உரித்த நாயனார் என்றுள்ளது. அதன் வடமொழிப் பெயர்ப்பான கீர்த்திவாகேஸ்வரர் என்பதை இறைவனுக்குச் சூட்டி இந்நாளில் வழிபட்டு வருகின்றனர்.  இறைவி ஆனந்தவல்லி. சப்தமங்கைகளில் முருகனின் வடிவமாகிய கௌமாரி வழிபட்ட தலமிது.

நந்திமங்கை


நந்தி சிவனை வழிபட்ட இத்தலம் அழகிய குளக்கரைக்கு அருகே வயல்களின் இடையே அமைந்துள்ளது. சற்றுத் தொலைவில் சுடுகாடு ஒன்றுமுள்ளது. அய்யம்பேட்டையில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள இத்தலத்தின் இறைவன் ஜம்புநாதர். இறைவி அகிலாண்டேஸ்வரி. இக்கோயில் முற்காலச் சோழர்களின் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டதாக உள்ளது. கோயிலின் பழைய சிலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளன. சப்த மங்கைகளில் வைஷ்ணவி வழிபட்ட தலமிது.





0 comments:

Post a Comment