Thursday, March 1, 2018

தொல்லியல் எச்சங்கள் - 1


திருச்சியின் எல்லைப்புறத்தேயுள்ள தொல்லியல் எச்சங்கள்:


எலந்தப்பட்டி தீர்த்தங்கரர் :


திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூரிலிருந்து சூரியூர் செல்லும் பாதையில், துப்பாக்கி தொழிற்சாலைக்கு அடுத்ததாக  எலந்தப்பட்டி என்றொரு ஊருள்ளது.  இவ்வூருக்கு முன்னதாக விலகிச் செல்லும் மண் பாதையில் சிவன் கோவில் செல்லும் வழியிலே  மகாவீரர் சிற்பமும் அதனருகே சிவலிங்க ஆவுடையும் காணப்படுகின்றன. அச்சிவலிங்க ஆவுடையின் மேல் பொருந்தாத பாணமொன்றை பொருத்தி உள்ளூர் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.  இதன் அருகே ஒரு பழைய கல்லானது கங்கம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. அந்த கல்லில் சில குறியீடுகள் உள்ளன. கல்லின் அடிபாகத்தில் சிமெண்ட் பூசி பீடம் எழுப்பியுள்ளதால், அவற்றின் விவரணைகளை சரிவரக் கூற இயலவில்லை. இவையனைத்தும் ஒரே பீடத்தில் அமைந்துள்ளன.

மேலும் இப்பகுதியில் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. நிறைய கல்வட்டங்கள் அழிந்துபட்டிருக்கின்றன. அவற்றின் அடையாளமாக முதுமக்கள் தாழியின் பானை ஓட்டு எச்சங்கள் காணக் கிடைக்கின்றன.
இங்கு கருப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள் கிடைக்கின்றன.  அவ்வோட்டின் உட்புறமானது பச்சை வண்ணத்தில் முலாம் பூசியும், வெளிப்புறமானது கரும்பச்சை மற்றும் ஊதா நிறத்தில் அலங்கரித்தும் காணப்படுகின்றன.  விரிவான அகழாய்வு செய்தால் நிறைய தொல் எச்சங்கள் கிடைக்கலாம். இங்கிருந்து பதினான்கு கி.மீ தொலைவிலுள்ள செங்களூர் பகுதியானது தொல்லியல் துறையினால் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் இவை இன்னமும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. ஆவணத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம். தொல்லியல் ஆய்வாளர் திரு. கரு.ராஜேந்திரன் அவர்களிடம் இதுகுறித்து அறிவிக்க அவர் மதுரை ஜெயின் அமைப்பின் மூலம் சமணச் சின்னத்திற்கான மஞ்சள் பலகை வைக்க ஏற்பாடு செய்தார்.

பட்டவெளி தொல் எச்சம் :


எலந்தப்பட்டிக்கு மேற்கேயுள்ள பட்டவெளி (பட்டவன் வெளி?) என்ற குக்கிராமத்தில் பிரம்மாண்டமான கல்வட்டங்கள் நிறைய உள்ளன. சில கல்வட்டங்கள் சிதைக்கப்பட்டுவிட்டனன. முன்னர் கேட்பாரற்றுக் கிடந்த  பழமையான தாமரைபீடம் கொண்ட சிவலிங்கமும் நந்தியும்,  இன்று உள்ளூர் மக்கள் சிலரது  முயற்சியினால் பொன்னீஸ்வரர் என்னும் பெயரிலே வழிபாட்டில் உள்ளன.  லிங்கத்தின் அமைப்பை வைத்து பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.

அய்யனார் :




பட்டவெளியின் வடக்குபுறத்திலே சுமார்  நான்கடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்ட அழகிய அய்யனார் சிலை ஒன்று உள்ளது. அரியதாக இவரின் பீடத்திலே யானையும், குதிரையும் ஒன்றாக  காணப்படுகிறன.

கூனவயல்:


பட்டவெளிக்கு மேற்கே காலத்தால் முற்பட்ட பிரம்மசாஸ்தா கோலத்திலுள்ள முருகன் சிலையொன்றுள்ளது. இச்சிலை குறித்த தகவலை திரு.கரு.ராஜேந்திரன் அவர்கள் அறிவித்திருந்தார். இவ்விடம் அந்நாளில் ஒரு பெரிய கோவிலாக இருந்திருக்கலாம். சுற்றிலும் செம்பாறை கற்கலாளான  சுற்றுச்சுவரின் எச்சமுள்ளது. தற்சமயம் சிறிய  கட்டுமானத்தில் சுவர் எழுப்பி சிலர் வழிபட்டு வருகின்றனர்.

1 comment:

  1. என்ன ஆச்சரியம் இது எனக்குத்தெரியவில்லையே

    ReplyDelete