திருச்சிக்கு தெற்கே சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் அழுந்தூர். இவ்வூரில் வரகுணஈஸ்வரம் என்ற பழம்சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுகள் இவ்வூரை அழிந்தியூர் என்றே குறிக்கிறது. முற்கால பாண்டியர் பெயரால் அழைக்கப்பட்ட இக்கோவில் கல்வெட்டுகள் சமீபத்தில் தமிழ் பல்கலைக் கழத்தினரால் படியெடுக்கப்பட்டது.
அங்குள்ள முதல்குலோத்துங்கனின் 48 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு இவ்வூரை 'இரட்டபாடி கொண்ட சோழவளநாட்டு உறத்தூர் கூற்றத்து திருஅழிந்தியூர் ' என குறிக்கிறது. மேலும் மாறவர்மன் குலசேகரனின் 38ம் ஆண்டு கல்வெட்டில் இவ்வூரானது 'வடகோனாட்டு அழிந்தியூர்' என குறிக்கப்படுகிறது. மற்றொரு கல்வெட்டில் அவ்வூரில் வாழ்ந்த காடையன் வலையன் குற்றிச்சேந்தன் ஆன பெரியநாட்டு முத்தரையன் அவ்வூருக்கு உரிமையுடைய காணியாளனாக குறிக்கப்படுகிறான்.
இதுவரையில் முத்தரையர்கள் போரில் பகைவரை வென்ற இடங்களில் ஒன்றாகிய அழிந்தியூர் என்ற ஊரினை தஞ்சை மாவட்டத்திலுள்ள 'தேரழுந்தூர்' எனக் கொண்டிருந்தனர் (இதை ராகவையங்கார் எழுதியுள்ளார்). இந்நாளில் அக்கருத்து மாறுபட்டுள்ளது. அழுந்தூர் வேறு அழிந்தியூர் வேறு என்றும், இக்கோவில் கல்வெட்டுகளில் தெளிவாகக் குறிப்பிடப்படும் இத்திருஅழிந்தியூரே போர் புரிந்த ஊராக இருக்க வேண்டுமென்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தற்சமயம் சில உள்ளூர் கொடையாளர்களால் இக்கோவில் பராமரிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment