Thursday, March 29, 2018

புதுக்கோட்டைக்குடைவரைகள் - 2

ஆய்ங்குடி குடைவரை: புதுக்கோட்டை


திருமயத்திலிருந்து அரிமழம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ தொலைவில் இராயவரம் என்னும் ஊர்  அமைந்துள்ளது. ஊரிலிருந்து மேற்கே சுமார் ஒரு கி.மீ தொலைவில் நகரத்தார்களின் மாளிகை போன்ற இல்லங்களை கடந்தால் ஆய்ங்குடி மலைக்கொழுந்தீசுவரர் எனும் பெயர் கொண்ட இறைவனைக் காணலாம். விவரமறியாது சாதாரணமாக செல்பவர்கள் இதை குடைவரை என்றறிய மாட்டார்கள். அந்தளவிற்கு வேலைப்பாடு செய்து, கோவிலின் முண்மண்டபத்தை தற்கால கான்கிரீட் பூச்சில் எழுப்பியுள்ளனர். தற்போது இக்குடைவரை ராமசாமி செட்டியார் மண்டபம் என்றழைக்கப்படுகிறது. திரு. கலைக்கோவன் அய்யாவின் புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள் என்ற புத்தகத்திலே இக்குடைவரை குறித்து படித்தறிந்ததாலேயே இதை எங்களால் குடைவரை என்று உற்று நோக்க முடிந்தது.   கோவிலை வெளிப்புறம் முழுதாக சுற்றிவந்தால் தான் இது ஒரு குடைவரைகோவில் என உணர முடியும். ஒரு சிறிய குன்றில் கருவறையை அகழ்ந்துள்ளனர். கருவறை தரையில் ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை போன்ற உறுப்புகளுடன் குடைவரை குடையப்பட்டுள்ளது. தாய்ப்பாறையில் எண்கோண வடிவ ஆவுடையாரில் லிங்கம் செதுக்கப்பட்டுள்ளது.
பிற்காலச் சேர்க்கையாக வெளிச்சுற்றில் இறைவி மங்களநாயகி அமைந்துள்ளார். மேலும் வள்ளி, தெய்வானை சமேத முருகன், விநாயகர், கொற்றவை மூர்த்தங்களும் உள்ளன. பாறைச்சுவற்றில் தமிழ், தெலுங்கு கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. நாங்கள் சென்ற சமயம் அங்கே விழா நடந்து கொண்டிருந்ததால் அதனை ஊன்று படிக்கும் வாய்ப்பு அமையவில்லை.

Tuesday, March 27, 2018

மங்கைக்கோயில்கள் - 3


பசுமங்கை

தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 14 கி.மீ தொலைவிலே அய்யம்பேட்டைக்கு முன்னதாக உள்ளது பசுபதிகோயில். இவ்வூர் நெடுஞ்சாலையின் இடப்புறமாக உள்ளது கள்ளப்பசுபதி என்றழைக்கப்படும் பசுபதீஸ்வரர் கோயில். இக்கோயில் கோச்செங்கட் சோழனால் திருப்பணி செய்யப்பட்ட மாடக்கோயிலாக கருதப்படுகிறது. மூன்று தளங்கள் கொண்ட கோபுர நிலையின் இருபுறமும் சிறிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்  மார்க்கண்டேயன் கதையுரைக்கும் சிற்பமானது எட்டு கைகளுடன் ஆயுதமேந்திய சிவனும் இடப்புறம் லிங்கமணைத்த மார்க்கண்டேயனும் வலப்புறம் ஒரு கையைத் தரையில் ஊன்றிய எமனுமாக அழகாய் காட்சி தருகிறது.
வலக்காலை லிங்கத்தின் மேல் வைத்துத் தன் கண்ணை குருடாக்கத் துணியும் கண்ணப்ப நாயனார் சிற்பமும், யானையொன்று லிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே நின்று லிங்கத்திற்கு குடமுழுக்கு செய்ய அருகே முனிவர் வணங்கி நிற்கும் சிற்பமொன்றும், லிங்கத்தைச் சுற்றி வந்து அதற்குக் குடையாக நிற்கும் ஐந்து தலை நாக சிற்பமும், அருகே தேவியுடன் சுகாசனத்தில் காட்சியளிக்கும் சிவனும் சிறிய சிற்பங்களாக உள்ளன. இவை தவிர கோயிலின் மேற்குப் புற வெளிப் பிரகாரச் சுவரிலே கழைக்கூத்தர்கள் சிற்பமும் வீணைக் கலைஞர்கள் சிற்பமும் ஆடற் பெண்டிர் சிற்பமென சிறு சிறு சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலிறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பால்வளநாயகி. தெற்குப்புறம் தென்முகக் கடவுள் சிற்பமுள்ளது.  அம்மன் சன்னதி வலப்புறமுள்ளது. சற்று உயர்ந்து காணப்படும் இருதள மாடக்கோயிலில் படியேறி மேற்சென்றால் நேர்முகமாக பிள்ளையார் சன்னதியும் அதற்கு வலப்புறம் மூலவர் சன்னதியும் உள்ளது. சன்னதியில் கோட்ட சிற்பங்கள் எதுவும் காணப்படவில்லை. கோயிலின் தென்மேற்கே மாந்தன் மாந்தியுடன் கூடிய தவ்வைத்தாய் சிற்பமுள்ளது. வடமேற்கே பைரவர் சிற்பமுள்ளது. சப்த மங்கைகளில் வராகி வழிபட்ட தலமிது.


தாழமங்கை

சப்த மங்கைக்கோயில்களில் ஆறாவது தாழமங்கை ஆகும். இக்கோயிலானது தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பசுபதிகோயிலுக்கு முன்பாக சாலையின் இடப்புறம் அமைந்துள்ளது. சப்த மங்கைகளில் இந்திராணி வழிபட்ட தலமாக நம்பப்படுகிறது. இங்குள்ள இறைவன் சந்திரமௌலீஸ்வரர். இறைவி இராஜராஜேஸ்வரி.

செந்தலைத் தூண் கல்வெட்டில் காணப்படும் நித்தவினோதவளநாட்டு கிழார் கூற்றத்து பவதாயமங்கலமே காலப்போக்கில் மருவி இன்று தாழமங்கை எனப்படுவதாக செல்வராஜ் ஐயா எடுத்துரைக்கிறார்.

Monday, March 26, 2018

புதுக்கோட்டைக்குடைவரைகள் - 1

குலாளர் கோட்டையூர் குடவரை : புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் தொல்லியல் எச்சங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு பன்முக மாவட்டம்.  இங்கே தொல்குடி மாந்தர்களின் ஈமக்காடு,  பல சமணச்சிலைகள், படுக்கைகள், பிராமி கல்வெட்டுகள், களப்பிரர் வட்டெழுத்து, கிரந்த எழுத்துகள், இசைகல்வெட்டுகள், நிரம்பியுள்ள மாவட்டம்.  இங்கே முழுமையான,  முற்றுபெறாத, சிறிய வகை குடைவரை என பல குடைவரைகள் காணப்படுகின்றன, அக்குடைவரைகள் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதலில் ஒரு எளிய குடைவரைக்கோவிலை காண்போம்.


திருமயத்திலிருந்து அரிமழம் சாலையில் கடியாபட்டிக்கும் ராயவரத்திற்கும் இடையில் இடது பக்கம் இந்த ஊர் அமைந்துள்ளது.
இக்குடவரையில் கருவறை மட்டுமே அகழப்பட்டுள்ளது.  உள்ளே லிங்கம் தாய்ப்பாறையில் வெட்டப்பட்டுள்ளது. வாயிலுக்கு நேரிருக்குமாறு தளத்தின் அடிப்பகுதியில் இருபடிகள் வெட்டப்பட்டுள்ளது. படிகளை ஒட்டிய தளத்தின்பகுதி சற்றே உயர்த்தி வெட்டப்பட்டுள்ளது.
கருவறை தரையில் ஜகதி, கண்டம், தாமரைவரி போன்ற உறுப்புகள் பெற்ற ஆவுடையார் கருவறையின் பின்பகுதியில் ஒன்றியவாறு அமைக்கப்பட்டுள்ளார்.
இக்குடவரையின் காலம் இன்னதென கணிக்க முடியவில்லை.  அருகே கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை,  பெரும்பாலும் கோவில் பூட்டியே கிடக்கிறது,  பிரதோஷம், சிவராத்திரி மட்டும் கோவிலில் பூஜை நடைபெறுமாம்.  அருகேயுள்ள ஊர்காரரான பழனிவேல் என்பவரிடம் சாவி இருக்கும். தேவைப்படின் அவர் உதவி செய்கிறார்.

மேலதிக தகவல்கள்:
1.ஆவணம் இதழ்.
2.கலைக்கோவன் அய்யா (புதுக்கோட்டை மாவட்டக் குடவரைகள்)


Saturday, March 24, 2018

சிற்றரசர் கல்வெட்டுகள் - 3

முத்தரையர்


நியமம் காளாபிடாரி
தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அந்நாளில் சந்திரலேகை சதுர்வேதிமங்கலம் என்றழைக்கப்பட்ட செந்தலை என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் முத்தரையர், முற்காலச்சோழர் மற்றும் பாண்டியர் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. நாம் இங்கே முத்தரையர் கல்வெட்டுகளின் செய்திகளைக் காண்போம். கோவில் குறித்து மற்றொரு பகுதியில் விரிவாகக் காண்போம்.
கோவிலின் முன்மண்டபத்திலுள்ள தூண்களில் நான்கு தூண்கள் இக்கோவிலுக்குரியவை அல்ல. அவை  கல்லணை - திருக்காட்டுப்பள்ளி இடையேயுள்ள நியமம் என்ற ஊரிலிருந்த காளாபிடாரிக் கோவிலின் தூண்களாகும். முத்தரைய மன்னன் சுவரன்மாறன் என்னும் பெரும்பிடுகு முத்தரையன் ஆயிரத்தளி எனப்படும் நியமத்திலே காளாபிடாரிக்கு கோயிலொன்று எடுப்பித்தான்.  இன்று கன்னிமார் கோவிலென்றும் பிடாரிக் கோவிலென்றும் ஊர் மக்களால் வழிபடப்படும் வயல்களுக்கிடையே உள்ள சிறிய மேடு தான் அந்நாளில் காளாபிடாரி கோவிலாக இருந்திருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கருதுகின்றனர். அன்று இங்கிருந்த கோவிலின் தூண்களைத்தான் இன்று செந்தலை சிவன் கோவில் முன்மண்டபத்திலே காண்கிறோம். இத்தூண்களில் காணப்படும் கல்வெட்டுகளில் சுவரன்மாறன் இப்பிடாரிக்கு கோவில் எழுப்பிய செய்தியும்,  அவரது வெற்றிகளும், அவரின் தந்தை மற்றும் பாட்டன் குறித்த தகவல்களையும் நாமறியலாம். மேலும் இத்தூண்களில் பெரும்பிடுகு முத்தரையனின் விருதுப்பெயரான, ஸ்ரீமாறன், ஸ்ரீசத்ருகேஸரி, ஸ்ரீகள்வர்கள்வன், ஸ்ரீஅதிஸாஹசன் போன்ற பெயர்களும் செய்யுள் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அச்செய்யுள் பாடல்களை,

1.பாச்சிள்வேள் நம்பன்
2.கோட்டாற்று இளம்பெருமானார்
3.கிழார் கூற்றத்து பவதாயமங்கலத்து அமருண்ணிலை ஆயின குவாவங்காஞ்சன்
4.ஆசாரியர் அநிருத்தர்

என்கின்ற நான்கு புலவர்கள் பாடுகின்றனர்.

கோட்டாறாற்றிளம் பெருமானார் பாடிய

"நிற்கின்ற தண்பணைந்தோன்று தஞ்சைத்திறம் பாடிநின்றார்
விற்கின்ற வீரர்கள் ஊர்கின்ற இப்பிணக்குன்றுகள்மேல்
நெற்குன்ற யானை ---------------------"

என்ற பாடலானது மிக ஓங்கிவளர்ந்த மூங்கில் தோன்றும் தஞ்சையின் சிறப்பைப் பாடி நின்ற புலவர்கள் பகைவருடைய பிணங்களை அடுக்கியதால் ஏற்பட்ட குன்றின்மேல், வில்லில் வல்ல வீரர்கள் ஊர்ந்துசெல்லும் நெற்போரைப்போல் காணப்படும்  யானைகளை பரிசு பெறுவர் என்று பொருள் தருகின்றது.

 "பாச்சிள்வேள் நம்பன்" பாடிய

"வஞ்சிப்பூச்சூடிய வாளமருள் வாகைப்பூக்
 குஞ்சிக் கமழ்கண்ணி கோமாறன்-தஞ்சைக்கோன்
கோளாளி மொய்பிற் கொடும்பாளூர் காய்ந்தெறிந்தான்
தோளால் உலகமளிக்கும் தோள்"

இரண்டாவது பாடலானது வஞ்சிப்பூ சூடி வாள்போரில் வெற்றிபெற்று, வாகைப்பூசூடிய கோமாறனும், தஞ்சைஅரசனும், சிங்கம் போன்று கொடும்பாளூர் பகைவரை கோபித்து கொன்றளித்தவருமாகிய சுவரன்மாறனின் தோள்களே இவ்வுலகை காக்கும் தோல்கள் என்று பொருள் தருகின்றது. இப்பாடலில் சுவரன் மாறனை  "தஞ்சைகோன்" என்று குறிப்பிடுவது,   விஜயாலயர் முத்தரையரிடமிருந்து தான் தஞ்சையை கைப்பற்றினார் என்கிற அறிஞர்களின் வாதத்திற்கு வலுசேர்க்கிறது.

அதேபுலவர்,

"சொற்புகு தொண்டை கனிபுகு தூமதி போன்முகத்தாள்
பொற்புக வெற்புப் பகுதிகண்டாய்ப்புக ழிபொருநாதார்
கற்புக விற்புகக் கண்டவன் கள்வர்கள்வன் தஞ்சை
நற்புக ழான்கரம் போற்கொடைக் காலுங் கருமுகிலே"
என்ற பாடலையும் பாடியிருக்கிறார். தலைவியிடத்தே மழைகாலத்தில் திரும்பிவருவேன் என்று கூறிச்சென்ற தலைவன் தனக்கு முன்பாக தலைவியிடத்தே செல்லும் கார்மேகத்தைப் பார்த்து, புகழி என்ற ஊரில் பகையரசனை தன் வில்லாற்றலாள் ஓடிஒளியச்செய்த கள்வர்கள்வன் எனும் பட்டமுடையவனும் தஞ்சையை நல்லபடியாக ஆளும் மன்னனாகிய சுவரன்மாறன் கைகளைப்போல் கைமாறு கருதாமல் கொடுக்கும் கார்மேகமே  சந்திரன் போல் பொலிவுடைய என் காதலி உன்வரவு கண்டு கார்காலம் வந்ததும் தலைவன் வரவில்லையே என்று ஏங்கும்படி செய்வது உனக்கு ஏற்றதன்று என்றுரைப்பதாக புலவர் பாடியுள்ளார்.  இதில் தஞ்சைஅரசன் என சுவரன்மாறனை சுட்டிகாட்டுகிறார்.

நான்காவது தூணில் ஆசாரியர் அநிருத்தர் இவ்வாறு பாடுகிறார்,

"மண்டீது கண்டான்தஞ்   சைசெம் புலநாட்டு வெண்கொடல்
விண்டபோது கொண்டாயர் மலையப் புதுமணல்மீது செந்தீத்
தண்டுகண் டாலன்ன கோவங்க ளூர்கின்ற தாழ்புறவே"

பகைவர்களுடைய நாடுகளை அழித்த சுவரன்மாறனின் செம்பூமியாகிய தஞ்சை நாட்டிலே ஆயர்கள் வெண்காந்தள் சூடியதையும், ஆற்றுப்புதுமணலில்  செந்நெருப்புபோல இந்திர கோபப்பூச்சிகள் ஊர்ந்து செல்கின்ற தாழ்ந்த முல்லைநிலப்பகுதியையும் காணலாம் என்பதிதன் பொருள். இப்பாடலில் தஞ்சையை செம்புலநாடென்றும் அது முல்லைநிலப்பகுதியெனவும் குறிக்கிறார்.

பாச்சிள்வேள் நம்பன் தான் பாடிய பாடலொன்றில் சுவரன்மாறனை "வல்லக்கோன்" என்கிறார்.

இத்தூண்களில் காணப்படுகின்ற கல்வெட்டுகளில்

1.பெரும்பிடுகு முத்தரையனான சுவரன்மாறனின் புகழ்பாடும் சாசனமும்
2.பாண்டியன் மாறஞ்சடையனின் 10 ம் ஆண்டு  (பொயு775) சாசனமும்
3.தெள்ளாறு எறிந்த நந்திபோத்தரையரின் 12ம் ஆண்டு (பொயு838) சாசனமும்
4.ராஜகேசரியின் 18ம்ஆண்டு (பொயு889) சாசனமும்
உள்ளன. இதில் மாறஞ்சடையனின் 775ம் ஆண்டை குறிப்பதால் அக்காலத்திற்கு முன்பே கோவில் எழுப்பியிருக்க வேண்டும். ஒரு கல்வெட்டிில் சுவரன்மாறனின் தந்தை, பாட்டனின் பெயர்கள் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளன.

1.பெரும்பிடுகு முத்தரையனான குவாவன் மாறன்
2.அவனுடைய மகன் இளங்கோவதியரையனான மாறன் பரமேஸ்வரன்
3.அவனுடைய மகன் பெரும்பிடுகு முத்தரையனாகிய சுவரன் மாறன்

மேலதிக தகவல்கள் :

1.தென்னிந்திய கல்வெட்டு சாசனம் தொகுதி:5
2.குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய தஞ்சாவூர்



Saturday, March 17, 2018

மங்கைக்கோயில்கள் - 2

அரிமங்கை


மங்கைக் கோயில்களில் இரண்டாவது அரிமங்கை. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து தென்மேற்கே 1 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது. இந்நாளில் போக்குவரத்து வசதியற்ற ஒரு குடியிருப்பு பகுதியாக உள்ள இவ்விடம் அந்நாளில் கிராம சபை கொண்ட பெரிய ஊராக இருந்துள்ளது. சக்கரப்பள்ளியில் உள்ள சோழர் காலக் கல்வெட்டொன்றில் உள்ள "கிழார்க்கூற்றத்து பிரம்மதேயம் அகழிமங்கலத்து ஸபையோம் எங்களூர் திருச்சக்கரபள்ளி" என்ற வரியிலிருந்து கிராமசபை கொண்ட அகழிமங்கலத்தின் ஒரு பகுதி சக்கரபள்ளி என அறிகிறோம். இவ்வகழிமங்கலமே காலப்போக்கில் மருவி இன்று அரிமங்கை ஆகியுள்ளதாக திரு.செல்வராஜ் ஐயா உரைக்கிறார். இக்கோயில் இறைவன் அரிமுக்தீஸ்வரர். இறைவி ஞானாம்பிகை. சப்த மங்கையரில் ஒருவரான மகேஸ்வரி வழிபட்ட தலமிது. மகேஸ்வரி சிவனின் அம்சமாவார். ரிசபத்தினை வாகனமாகக் கொண்டவர். இக்கோயிலானது இன்று முற்றிலும் புதியதாகக் காட்சியளிக்கிறது.

சூலமங்கை


"நறையூரில் சித்தீச் சரம்நள் ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை
தோணி புரம்துருத்தி சோமீச் ச(ர்)ரம்
உறையூர் கடல்ஒற்றி யூர்ஊற் றத்தூர்
ஓமாம் புலியூர் ஓர்ஏட கத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப் பூரும்
கயிலாய நாதனையே காணல் ஆமே."

என்ற திருநாவுக்கரசரின் திருத்தாண்டகப் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக உள்ளது. தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் அய்யம்பேட்டையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் கருவறைக்கு முன்பாக சூலதேவர் சிலையொன்றுள்ளது. மூன்றாம் குலோத்துங்கன் கால கல்வெட்டில் இக்கோயில் இறைவன் பெயர் கரி உரித்த நாயனார் என்றுள்ளது. அதன் வடமொழிப் பெயர்ப்பான கீர்த்திவாகேஸ்வரர் என்பதை இறைவனுக்குச் சூட்டி இந்நாளில் வழிபட்டு வருகின்றனர்.  இறைவி ஆனந்தவல்லி. சப்தமங்கைகளில் முருகனின் வடிவமாகிய கௌமாரி வழிபட்ட தலமிது.

நந்திமங்கை


நந்தி சிவனை வழிபட்ட இத்தலம் அழகிய குளக்கரைக்கு அருகே வயல்களின் இடையே அமைந்துள்ளது. சற்றுத் தொலைவில் சுடுகாடு ஒன்றுமுள்ளது. அய்யம்பேட்டையில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள இத்தலத்தின் இறைவன் ஜம்புநாதர். இறைவி அகிலாண்டேஸ்வரி. இக்கோயில் முற்காலச் சோழர்களின் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டதாக உள்ளது. கோயிலின் பழைய சிலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளன. சப்த மங்கைகளில் வைஷ்ணவி வழிபட்ட தலமிது.





Friday, March 16, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 5


இன்று நீங்கள் திருப்பணி செய்யப்பட்ட கோயில்களுக்குச் சென்றால், அங்கே முன்னர் இருந்த பழைய கல்வெட்டுகளானது அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டோ அல்லது அதன் மேல் வண்ணம் அடிக்கப்பட்டோ அல்லது அவைகள் துண்டு துண்டாகவோ இல்லை தலைகீழாகவோ வெவ்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருப்பதை காணலாம். நமக்கின்றைக்கு இருக்கும் வரலாற்று விழிப்புணர்வு இந்நிலையிலேயே உள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட கோயில் திருப்பணியைக் குறிக்கும் இரண்டு கல்வெட்டுகள் அன்றைய அரசின் வரலாற்றுப் பார்வையை எடுத்துரைக்கின்றன. அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாதசுவாமி திருக்கோயில் கருவறையின் தென்புறச் சுவரிலே இக்கல்வெட்டுகள் உள்ளன.இக்கல்வெட்டுகளுள் ஒன்று, அந்நாளில் கீலகமாகியிருந்த இக்கோயிலை பிரித்துக் கட்டவும் அவ்வாறு கட்டுவதற்கு முன்னர் இக்கோயில் விமானச் சுவரிலுள்ள கல்வெட்டுகளை படியெடுத்து வைக்கவும் மேலும் இக்கோயில் திருப்பணியில் யார்யாருக்கு என்னென்ன பொறுப்பு என்பதையும் உரைக்கும் முதலாம் இராஜராஜனின் 28ஆம் ஆட்சியாண்டுக் (பொயு 1013) கல்வெட்டாகும். மற்றொன்று, மேற்சொன்ன கல்வெட்டு ஆணையின்படி கோயிலானது பிரித்துக் கட்டப்பட்டு, முன்னர் படியெடுக்கப்பட்ட பழைய கல்வெட்டுகளை விமானச் சுவற்றிலே மீண்டும் எழுதியதைக் குறிக்கும் முதலாம் இராஜேந்திரனின் 14ஆம் ஆட்சியாண்டுக் (பொயு 1026) கல்வெட்டாகும். சுமார் 14 ஆண்டுகள் திருப்பணி நடைபெற்றுள்ள இக்கோயிலில் இவர்களுக்கு முன்னர் 150 ஆண்டுகாலமாக ஆண்டிருந்த மன்னர்களின் கல்வெட்டுகளைப் படியெடுத்து இவர்களின் காலத்திலே மீண்டும் எழுதி முந்தைய வரலாற்றைப் பேணியிருக்கின்றார்கள். இதற்காக மொத்தம் 23நபர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். இவ்விரண்டு கல்வெட்டுகளில் இராஜேந்திரனின் கல்வெட்டு முழுதாக படிக்கும் படியும் அக்கல்வெட்டின் முடிவிலே துவங்கும் இராஜராஜனின் கல்வெட்டானது பின்னர் எழுப்பப்பட்ட மண்டபச் சுவரால் பாதி மறைக்கப்பட்டு முழுதாக படிக்க இயலாத நிலையிலுமுள்ளது.

முழுதான தகவல்கள்:

1. SII Volume 5: No. 651 &  652

2. அரியலூர் மாவட்டக் கல்வெட்டுகள், செப்பேடுகள் (தொகுதி 2) - டாக்டர்.இல.தியாகராஜன்
க.வரிசை எண்: 324 & 332





Saturday, March 10, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 4

பராந்தகரின் மகன்கள் நால்வரில் ஒருவர் உத்தமசீலி.  இவர் குறித்த கல்வெட்டுகள் மிகவும் அருகியே காணப்படுகின்றன.  இவரைக் கொன்றுதான் வீரபாண்டியர் "சோழன் தலை கொண்ட கோவீரபாண்டியன்" எனப் பெருமையுடன் தன்னை அழைத்துக் கொண்டார் என்று வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர். இவர் பெயரில் திருச்சி அருகே உத்தமசீலி சதுர்வேதி மங்கலம் என்ற ஊருள்ளது.  காவிரி தென்கரை பாடல்பெற்ற  தலங்களில் ஒன்றான திருப்பாற்றுறையில்  இச்சதுர்வேதி மங்கலம் குறித்த குறிப்புண்டு. நாங்கள் இதுவரை கிடைத்த கல்வெட்டு தரவுகளை ஆராய்ந்து பார்க்கையில், திருவிடைமருதூர், கண்டியூர்,  குற்றாலம் என்ற மூன்று இடங்களில் மட்டுமே இவர் நேரடியாக நிவந்தம் கொடுத்த கல்வெட்டுகள் உள்ளதாக கருதுகிறோம். (மேற்கொண்டு இருப்பின் நண்பர்கள் தெரிவிக்கவும்)
இவற்றில் திருவிடைமருதூர் கல்வெட்டு புணரமைப்பில் காணாமல் போய்விட்டது.  குற்றாலத்தில் நிலைமை தெரியவில்லை.  எஞ்சியிருப்பது கண்டியூரில் உள்ள கல்வெட்டு.  இக்கல்வெட்டின் இன்றைய நிலையை பார்ப்போம். கண்டியூர் சிவன் கோயில்கருவறையின் கிழக்குப்புறச் சுவரில் உள்ள இவ்வரிய கல்வெட்டை, கிட்டத்தட்ட 3mm அளவிற்கு சுண்ணாம்பு பூசி  அழகுபடுத்தி இருக்கின்றனர். (😏😏) அதை தேடி கண்டுபிடிக்க வெகுநேரம் பிடித்தது.  கையில் கல்வெட்டின் நகல்வைத்து தேடும்போதே இந்நிலையெனில்,  புதிதாக வருவோர் தேடிப் படிப்பது கடினம் தான். இக்கல்வெட்டின் வடபுறம் "வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி" கல்வெட்டும் உள்ளது.  என்ன வெஞ்சினமோ? கல்வெட்டின் நகலையும் அசலையும் இணைத்துள்ளோம் பாருங்கள்.

Friday, March 9, 2018

மங்கைக்கோயில்கள் - 1

சக்தியின் ஏழு வடிங்களான பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, மகேந்திரி, சாமுண்டி என்ற சப்த மங்கைகள் தனித்ததனியே சிவனை வழிபட்ட தலங்களை மங்கைக் கோயில்கள் என்று வழிபடுகிறோம். புராணங்களில் இது குறித்து பல கதைகள் இருப்பினும் அவைகளில் அந்தகாசுரன் கதையும், மகிசாசுரன் கதையும் முதன்மையாகச் சொல்லப்படுகின்றன.  தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச் சுற்றியுள்ள சக்ரமங்கை, அரிமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை என்கின்ற ஏழு கோயில்களை மங்கைக் கோயில்கள் என்றழைக்கிறோம். அவைகள் குறித்து இனி காண்போம்.


சக்ரமங்கை:



சக்கரபள்ளி எனும் ஊரில் அமைந்துள்ள இக்கோயிலானது சப்த மங்கையரில் முதலாமவளான பிராமி சிவனை வழிபட்ட தலமாகும். பிராமி நான்கு முகமும் நான்கு கைகளும் கொண்டு பிரம்மாவின் அம்சமாகத் திகழ்பவள். அன்னப் பறவையை வாகனமாகக் கொண்டவள். தத்துவார்த்தமாகப் பார்த்தால் பிராமி கலையின் குறியீடு. திருஞானசம்பந்தர் இத்தலத்தை வழிபாடு செய்து, கொல்லிப் பண்ணிலே 'படையினார் வெண்மழுப் பாய்புலித் தோல்அரை' என்று தொடங்கும் பதினொரு பாடல்களைப் பாடியிருக்கிறார். இப்பாடல்கள் மூன்றாம் திருமுறைத் தேவாரத்திலே 27வதாக வைக்கப்பட்டுள்ளன. 

இக்கோயில் இறைவன் பெயர் சக்கரவாகேஸ்வரர். இறைவி தேவநாயகி. தல விருட்சம் வில்வம். தீர்த்தம் காக தீர்த்தம். அம்மன் சன்னதி தனியே உள்ளது.  கோயில் கருவறையின் வெளிப்புறக் கோட்டச் சிற்பங்களாக தென்புறச் சுவரிலே தென்முகக் கடவுளும், மேற்கே அடி முடி காணா அண்ணலும், வடபுறச் சுவரிலே படைப்போனும் உள்ளனர். அர்த்த மண்டப கோட்ட சிற்பங்களாக தென்புறம் குடை கொண்ட விநாயகரும், வடபுறச் சுவரிலே உமாமகேஸ்வரியும் உள்ளனர். உமாமகேஸ்வரிக்கு அருகே சண்டிகேசருக்கு தனி சன்னதியுள்ளது.

கண்டராதித்தரின் மனைவியாகிய செம்பியன் மாதேவியால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயிலின் கருவறை அர்த்தமண்டபத் தென்புறச் சுவரிலே, உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தில் இத்தேவியால் அழிக்கப்பட்ட அறக் கொடைகள் குறித்து பேசும் கல்வெட்டுள்ளது. அக்கல்வெட்டிற்கு நடுவே சிறிய மாடமொன்று குடையப்பட்டு, அம்மாடத்தின் ஒருபுறம் மேலே குடையும், இருபுறமும் சாமரமும் விளக்கும் கொண்ட மாலையணிந்த சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. மறுபுறம் கையில் மாலையேந்திய தோழியோடு இரு கரம் கூப்பி லிங்கத்தை வழிபடும் பெண்ணின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இப்பெண்சிற்பத்தை செம்பியன் மாதேவியென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இங்குள்ள முதலாம் ராஜராஜனின் கல்வெட்டொன்றிலே சுந்தர சோழரைப் 'பொன் மாளிகைத் துஞ்சின தேவர்' என்றழைக்கும் சொற்றொடர் வருகிறது. மேலும் இக்கோயிலில் முதலாம் ராஜேந்திரனின் கல்வெட்டுகளும், முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டும், விஜயநகர அரசு காலத்திய கல்வெட்டும் உள்ளன.  கருவறைக்கு வெகு தொலைவாக நுழைவாயிலுக்கு அருகே நந்தி உள்ளது.  ராஜகோபுரமில்லா கோயிலிது.





Tuesday, March 6, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 3


 சமீபத்திய தேடலின் போது சோழ வரலாற்றினை உரைக்கும் கல்வெட்டுகளில் முக்கியமான இரண்டு கல்வெட்டுகள் அழிந்திருக்கக் கண்டோம்.
சப்தவிடங்க தலங்களில்  இரண்டாவதும்,  தேவாரம் பாடல்பெற்ற தலங்களில் நூற்றிஇருபத்தைந்தாவது தலமுமான திருமறைக்காடு எனும் வேதாரண்யத்திலே, முதலாம் ஆதித்தன் துவங்கி மூன்றாம் ராஜேந்திரன் வரையில் கிட்டத்தட்ட 50 கல்வெட்டுகளுக்கும் மேல்  படியெடுக்கப்பட்டிருக்கின்றன. இன்று இக்கோவிலில் சில கல்வெட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. மறைந்த கல்வெட்டுகளில் இரண்டு முக்கிய கல்வெட்டுகளும் அடங்கும். அவையாவன,

முதல் கல்வெட்டு :

 "கோப்பரகேசரி" என்றும் "மதிர கொண்ட கோப்பரகேசரி" என்றும் துவங்கும் பராந்தகரின் கல்வெட்டிற்கு மாறாக " மதின் மதுரை சிதைத்த" என்று துவங்கும் கல்வெட்டிது. இக்கல்வெட்டின் ஏழாம் வரியினில் "சிங்களர் கொன்றன்னை" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கும் காணவியலாத இவ்வரிய கல்வெட்டானது கோயிலின் கருவறை முன்பண்டபத்திலுள்ள நான்காம் தூணிலே வெட்டப்பட்டுள்ளது.  இக்கல்வெட்டானது தூணில் தேங்கிய அளவிற்கதிகமான எண்ணெய் படலத்தால் பாழாகி எழுத்துகள் படிக்க இயலாத நிலையில் உள்ளது.  மிகுந்த சிரமப்பட்டு தேடியதில் "சிங்களர் கொன்றனை" என்ற வரிமட்டும் தென்பட்டது,  ஏனைய வரிகள் தூர்ந்துபோய்விட்டன. அக்கறையோடு சுத்தம் செய்தால் கொஞ்சமேனும் இக்கல்வெட்டு பிழைக்கக் கூடும்.

இரண்டாம் கல்வெட்டு :

சோழப்பேரரசின் கடைசி கல்வெட்டான மூன்றாம் இராஜேந்திரரின் 33 ம் ஆட்சியாண்டு கல்வெட்டிது (1279).  முக்கியமான கல்வெட்டென்று தனியாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  தமிழக வரலாறறியும் மாணவர்களையெல்லாம் அழைத்துக் காட்ட வேண்டிய இக்கல்வெட்டினை இன்று நாமிழந்துவிட்டோம்.  திருச்சியில் இருந்து எதைத்தேடி ஆர்வமுடன் பயணித்தோமோ,  அக்கல்வெட்டின் சுவடைக் கூட காணாது திரும்பிவிட்டோம். கல்வெட்டுகளின் பிரதியையும்,  அழிந்து போன இடத்தையும் இணைத்துள்ளோம்.


கல்வெட்டுத்  தகவல்கள்:
தென்னிந்திய கல்வெட்டு சாசனங்கள் Volume:17, (page 445-545)



Saturday, March 3, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 2


சிலமாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வயலோகத்தில்,  வரலாற்றில் ஆர்வமுள்ள நல்லுல்லங்கள் இணையதளம் வழியாக ஒன்றிணைந்து அகத்தீஸ்வரர் என்ற மூன்றாம் குலோத்துங்கன் கால கோவிலை உழவாரம் செய்து மீட்டோம். அவ்வூரிலுள்ள தொன்மையான பிடாரி கோவிலில் முதலாம் ஆதித்தன் கால கல்வெட்டு ஒன்று துண்டு துண்டாக கோவில் வாசலருகே புதர் மண்டியநிலையில் கவனிப்பாரற்று கிடந்தது. இக்கல்வெட்டானது முன்னரே கரு.இராஜேந்திரன் அய்யா அவர்களால் படியெடுக்கப்பட்டுள்ளது. 
இருப்பினும் இதன் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.  அக்கல்வெட்டின் வாசகம் காண்போம்.
1.ஸ்வதிஸ்ரீ ஸ்ரீ இராகேஸரி பன்
2.மர்க்கி யாண்டு 3 ஆவது இவ்வாண்டு
3.வயலக நாட்டு வயலகத்து குளத்துக்கு
4.குளப்பட்டி செய்தநிலம் இவ்வூர் நாட்டா
5.ர் பெருஞ்செய்யும் நாற்றுக்கால் துடர்செய்யும்
6.இவையிரண்டும் நிலன் மூன்றுமா இக்குள
7.த்துக்கு சந்திராதித்தவல் நிப்பதாக செ
8.ய்தோம் வீரசோழ இளங்கோ வேளார் வே
9.ள் படையும்உடநிலை சேவகரும் இ
10.ஞ்சது இது ரக்ஷிப்பான் பாதம் எங்க
11.ள் தலைமேது இபந்மாஹேச்வர் ரகஷை

வயலோகத்திலுள்ள குளத்தின் பராமரிப்பிற்கு ஆதித்தனின் அதிகாரியான வீரசோழ இளங்கோவேளாரின் வேள்படை நிலக்கொடை அளித்த கல்வெட்டு இது.  சந்திரன் சூரியனும் இருக்கும்வரை இத்தர்மம் தொடர வேண்டுமென்றும் அதைச் செய்பவர் பாதம் அவர்கள் தலை மீது என்றுமுரைக்கும் இச்சாசனம் கேட்பாரற்று காலஓட்டத்தில் அழியும் நிலையிலுள்ளது.

Friday, March 2, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 1



வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சில கல்வெட்டுகளை பதிப்பித்த புத்தகங்களில் மட்டும் நாம் படித்தறிந்து கொண்டிருக்கிறோம்.  அவ்வாறான கல்வெட்டுகளை  நேரில் சென்று கண்டு அதைச்  சரிபார்த்து அதன் இன்றய நிலையினை ஆவணப்படுத்தும் சிறு முயற்சி இது.
முதலாவதாக காவிரி தென்கரைத் தலமான தில்லைஸ்தானத்தை அறிவோம். இக்கோவிலில் மொத்தம் 65 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. முதலாம் ஆதித்தனின் கட்டுமானக் கோவிலாகிய இதில் பல முக்கிய கல்வெட்டுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

கல்வெட்டு:1


1.ஸ்வதிஸ்ரீ தொண்டைநாடு பாவின சோழன் பல்
2.யானைக் கோக்கண்டனாஇன ராஜகேஸரிவந்மரான
3.லுஞ் சேரமான் கோத்தாணு இரவி(யா)லுந் விசுஞ் சா
4.மரையுஞ் சிவிகையுந் திமிலையுங் கோயிலும் போனக
5.முங் காளமுங் களிற்று நிரையுஞ் செம்பியன்றமிழ வேளெ
6.ன்னுங் குலப்பியரும் பெற்ற விக்கி அண்ணன் றேவிவான
7.கடம்பமாதேவி திருநெய்தானத்து மகாதேவர்க்கு நந்தாவிளக்க
8.னுக்குக் குடுத்த ஆடு

இக்கல்வெட்டு முதலாம் ஆதித்தனின் கோக்கண்டன் என்ற சிறப்பு பெயரையும் சேரஅரசன் தாணுரவியின் பெயரையும் சுட்டும் சிறப்பான கல்வெட்டு.
ஆதித்தனின் தொண்டைமண்டல வெற்றியை குறிக்கும் ஒரே கல்வெட்டும் இதுவே.  மேலும் சேர,சோழ மன்னர்களால் செம்பியன் தமிழவேள் என்ற பட்டத்தையும், ஆசனம், சிவிகை, திமிலை போன்ற சிறப்பு சின்னங்களையும் பெற்ற விக்கியண்ணனின் மனைவி கடம்பமாதேவி விளக்கெரிக்க நூறு ஆடு கொடுத்ததும் அறிய முடிகிறது. இவை தென்னிந்திய கல்வெட்டு பதிப்பில் உள்ளது. படியெடுக்கும்போது முழுதாக இருந்த இக்கல்வெட்டை,சில காலம் முன்னர் நடந்த கோயில் புணரமைப்பின் போது எடுக்கப்பட்ட புதிய அறையின் சுவரானது இரண்டாகப் பிரிக்கின்றது. குறுக்குவெட்டாக கொண்டால் கல்வெட்டின் முன் பகுதி படிக்கவும் இடைப்பகுதி சுவரால் அழிந்தும் கடைப்பகுதி அறையில் மறைந்துமுள்ளது. இன்று நீங்கள் இதை முழுதாகப் படிக்க இயலாத நிலையுள்ளது.

கல்வெட்டு 2:



1.ஸ்வதிஸ்ரீ கோவிராஜகேஸரிவனன்மருக்கு யாண்டு அ ஆவது சோழப்
2.பெருமானடிகள் மகனார் ஆதித்தன் கன்னரத்தேவன் திருநெய்த்தானத்
3.து மஹாதேவர்க்கு ஒரு நொன்தாவிளக்கு சந்திராதித்தவல் எரிப்பதற்க்கு கொடுத் 
4 .தபொன் உய இருபதின் கழஞ்சு இப்பொன் கொண்டு எரிப்போநோம்
5.திருநெய்த்தானத்து ஸபையோரும் ஊரோரும் இவ்விளக்கு  பண்மாஹேரான ரக்ஷை

இக்கல்வெட்டானது கோவிலின் கருவறை தெற்குச்சுவரில் உள்ளது. இதில் முதலாம் ஆதித்தனின் மகனாகிய இளவரசர் கன்னரத்தேவன் திருநெய்த்தான மஹாதெவர்க்கு இருபது கழஞ்சு பொன்னளித்து ஒரு நொந்தாவிளக்கு எரிக்கச்செய்தமை குறித்த குறிப்புள்ளது.  இதனை சபையோரும் ஊராரும் ஏற்றனர்  என்பது இதன் சாராம்சம்!
கன்னரதேவன் முதலாம்பராந்தகனின் சகோதரராவார். இவர் குறித்த கல்வெட்டு மிகவும் அரிதானவை.  அதில் இதுவும் ஒன்று. இக்கல்வெட்டு நன்னிலையிலுள்ளது.

கல்வெட்டு 3:


1.ஸ்வதிஸ்ரீ கோராஜகேஸரிவந்மருக்கு யாண்டு யங ஆவது பொய்கை நாட்டுத்
2.தேவதானத் திருநெய்த்தானத்து மஹாதேவர்க்கு தென்னவன் வீரா
3.தி மாராசானாயின கட்டி ஒற்றிஊரன் நிசதி உழக்கு நெய்யாலே நொந்தாவிள
4.க்கெரிவதாக கொடுத்த பொன் உயரு உம் பராந்தகவிளங்கோ மஹாதேவியா
5.ர் வரகுணபெருமானார் ஒருநொந்தாவிளக்குக்கு கொடுத்த பொன் உயரு...........
6.....தேவர் நிலன் கறையுந் திடலில் கல்லி நீர்நிலமாக மசக்கின நிலத்து(க்)
7.கெல்லைக் கரைகீழ் விஷீ....... கர்துடவைக்கு மேர்க்குங் "கரிகாலக்கரை"க்கு வடக்குந் தேவருடை
8.ய புன்செய் கறாய்க்கு கிழக்கு மந்தனூர் வாய்க்காலு தெற்குஇம்மிசைந்த பெருநா
9.ன்கெல்லையுள்ள பட்ட நிலம் செ பத்துச் செய்யுங் கொண்டு நிசதியிரண்டு நொந்தாவிள
10.க்கு சந்திராதித்தவல் எரிப்போமெனந் திருநெய்தானத்து ஸபையும் பாதமூலமிது

முதலாம் ஆதித்தசோழனின் கல்வெட்டு இது.
திருநொந்தாவிளக்கெரிக்க பிரம்மாதிராயன் ஒற்றியூரான் கட்டி என்பவனும் பராந்தக இளங்கோவேளாரின் மனைவி வரகுணபெருமாட்டி என்பவரும் அளித்த கொடையைக் குறிக்கின்றது.
இக்கல்வெட்டின் தலையாய சிறப்பென்னவெனில்,  கரிகாலக்கரை என்று ஆற்றின் கரையை இது குறிப்பிடுகின்றது. காவிரிக்கு கரிகாலன் கரையெழுப்பினான் என்பதை சங்ககாலப் பாடலினால் அறிகிறோம். அதைக்குறிக்கும் விதத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான முதலாம் ஆதித்தன் காலத்திலும் காவிரிக்கரையானது கரிகாலக்கரை என்று வழங்கப்படுகிறதென்றால் அது  முக்கியத்துவம் வாய்ந்தது தானே. மேற்ச்சொன்ன அந்தப் புதிதாக எழுப்பிய  அறையில் இக்கல்வெட்டும் மறைந்துபோனதைச் சென்றால் பார்க்கலாம். 

Thursday, March 1, 2018

சிற்றரசர் கல்வெட்டுகள் - 2

முத்தரையர் - 2


புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மலையடிப்பட்டியில் இரண்டு குடைவரைக் கோயில்களும், அவற்றிற்குப் பின்னுள்ள குன்றின் ஒற்றைப் பாறையில் சமணக் கோட்டோவியங்களும் உள்ளன. குடைவரைகளில்  ஒன்று ஒளிபதி விஷ்ணு க்ரஹம் எனும் வைணவத்தலம் ஆகும். மற்றொன்று  வாகீஸ்வரர் என்ற சைவத்தலமாகும். இச்சைவத்தலமான வாகீஸ்வரர் கோவிலானது குவாவஞ் சாத்தனேன் என்ற முத்தரையரால் குடையப்பட்டது. முத்தரைய மன்னர்கள் எழுப்பிய சில கோவில்களில் இதுவும் ஒன்று. இச்செய்தியை உரைக்கும் கல்வெட்டானது இக்கோவிலிலுள்ள தூணில்  பொறிக்கப்பட்டுள்ளது. அது தரும் செய்தியிது,



1ஸ்வதிஸ்ரீ கோவிஜய நந்திபர்மருக்கு ஆண்டு பதி
2.னாறாவது விடேல்விடுகு முத்தரையனாகிய
3.குவாவஞ் சாத்தனேன் திருவாலத்தூர் மலை
4.தளியாக குடைந்து............ய்து
5.இத்தளியை...........
6...........கீழ் செய்ங்களி நாட்டு
7........ நாட்டார்க்கு செய்த....

சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான கோவிலிது.

தொல்லியல் எச்சங்கள் - 1


திருச்சியின் எல்லைப்புறத்தேயுள்ள தொல்லியல் எச்சங்கள்:


எலந்தப்பட்டி தீர்த்தங்கரர் :


திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூரிலிருந்து சூரியூர் செல்லும் பாதையில், துப்பாக்கி தொழிற்சாலைக்கு அடுத்ததாக  எலந்தப்பட்டி என்றொரு ஊருள்ளது.  இவ்வூருக்கு முன்னதாக விலகிச் செல்லும் மண் பாதையில் சிவன் கோவில் செல்லும் வழியிலே  மகாவீரர் சிற்பமும் அதனருகே சிவலிங்க ஆவுடையும் காணப்படுகின்றன. அச்சிவலிங்க ஆவுடையின் மேல் பொருந்தாத பாணமொன்றை பொருத்தி உள்ளூர் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.  இதன் அருகே ஒரு பழைய கல்லானது கங்கம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. அந்த கல்லில் சில குறியீடுகள் உள்ளன. கல்லின் அடிபாகத்தில் சிமெண்ட் பூசி பீடம் எழுப்பியுள்ளதால், அவற்றின் விவரணைகளை சரிவரக் கூற இயலவில்லை. இவையனைத்தும் ஒரே பீடத்தில் அமைந்துள்ளன.

மேலும் இப்பகுதியில் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. நிறைய கல்வட்டங்கள் அழிந்துபட்டிருக்கின்றன. அவற்றின் அடையாளமாக முதுமக்கள் தாழியின் பானை ஓட்டு எச்சங்கள் காணக் கிடைக்கின்றன.
இங்கு கருப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள் கிடைக்கின்றன.  அவ்வோட்டின் உட்புறமானது பச்சை வண்ணத்தில் முலாம் பூசியும், வெளிப்புறமானது கரும்பச்சை மற்றும் ஊதா நிறத்தில் அலங்கரித்தும் காணப்படுகின்றன.  விரிவான அகழாய்வு செய்தால் நிறைய தொல் எச்சங்கள் கிடைக்கலாம். இங்கிருந்து பதினான்கு கி.மீ தொலைவிலுள்ள செங்களூர் பகுதியானது தொல்லியல் துறையினால் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் இவை இன்னமும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. ஆவணத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம். தொல்லியல் ஆய்வாளர் திரு. கரு.ராஜேந்திரன் அவர்களிடம் இதுகுறித்து அறிவிக்க அவர் மதுரை ஜெயின் அமைப்பின் மூலம் சமணச் சின்னத்திற்கான மஞ்சள் பலகை வைக்க ஏற்பாடு செய்தார்.

பட்டவெளி தொல் எச்சம் :


எலந்தப்பட்டிக்கு மேற்கேயுள்ள பட்டவெளி (பட்டவன் வெளி?) என்ற குக்கிராமத்தில் பிரம்மாண்டமான கல்வட்டங்கள் நிறைய உள்ளன. சில கல்வட்டங்கள் சிதைக்கப்பட்டுவிட்டனன. முன்னர் கேட்பாரற்றுக் கிடந்த  பழமையான தாமரைபீடம் கொண்ட சிவலிங்கமும் நந்தியும்,  இன்று உள்ளூர் மக்கள் சிலரது  முயற்சியினால் பொன்னீஸ்வரர் என்னும் பெயரிலே வழிபாட்டில் உள்ளன.  லிங்கத்தின் அமைப்பை வைத்து பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.

அய்யனார் :




பட்டவெளியின் வடக்குபுறத்திலே சுமார்  நான்கடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்ட அழகிய அய்யனார் சிலை ஒன்று உள்ளது. அரியதாக இவரின் பீடத்திலே யானையும், குதிரையும் ஒன்றாக  காணப்படுகிறன.

கூனவயல்:


பட்டவெளிக்கு மேற்கே காலத்தால் முற்பட்ட பிரம்மசாஸ்தா கோலத்திலுள்ள முருகன் சிலையொன்றுள்ளது. இச்சிலை குறித்த தகவலை திரு.கரு.ராஜேந்திரன் அவர்கள் அறிவித்திருந்தார். இவ்விடம் அந்நாளில் ஒரு பெரிய கோவிலாக இருந்திருக்கலாம். சுற்றிலும் செம்பாறை கற்கலாளான  சுற்றுச்சுவரின் எச்சமுள்ளது. தற்சமயம் சிறிய  கட்டுமானத்தில் சுவர் எழுப்பி சிலர் வழிபட்டு வருகின்றனர்.