Monday, September 17, 2018

கல்வெட்டின் நிலையறிதல் -15

 
முதலாம் ராஜராஜ சோழரை அவரது மெய்கீர்த்தி இன்றி குறிக்கும் கல்வெட்டுகள் சாலைகலமறுத்த கோவிராஜகேசரி என்றே முதன்மைபடுத்துகின்றது என்பதை நாமறிவோம். அவ்வளவு சிறப்புமிக்க போரினைப்பற்றிய தகவல்கள் கிடைக்காதது நமக்கு ஒரு வியப்பான விடயமே ! இன்றுநாம் காணவிருக்கும் கல்வெட்டுச்செய்தி ராஜராஜரையும் மதிரைகொண்ட  ராஜராஜதேவர் எனக்கூறும் கல்வெட்டு செய்தியாகும்.
மதிரைகொண்டகொப்பரகேசரி என்று முதலாம் பராந்தகரும், 
மதிரைகொண்டராஜகேஸரி என்று சுந்தரசோழரும் மதுரையை வென்றதன் பொருட்டு தமக்கு பட்டப் பெயரைச் சூட்டிக்கொண்டனர். அதே போன்று
ராஜராஜசோழனும் மதுரையை வென்றதனை குறிக்கும் விதமாக மதிரை கொண்ட இராஜராஜதேவர் எனப் பட்டம் சூட்டிக் கொண்டார். இச்செய்தியை  அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியமறை எனும் பகுதியில் வீற்றிருக்கும் காளி கோயிலில் தனியே வைக்கப்பட்டிருக்கும் நிலைத் தூண் கல்வெட்டு தாங்கிநிற்கிறது. ராஜேந்திரசிங்கவளநாட்டில் மிறைக்கூற்றதில் உள்ள உஞ்சேனைமாகாளமுடைய பட்டராகிக்கு (உஜ்ஜைனிமாகாளிக்கு) மற்றும் உஞ்சேனைமாகாளமுடைய கூத்தர்க்கும் (நடராஜர் )க்கும் விளக்கு எரிக்க இன்றைய திரணி எனும் ஊரை (தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊரிது)    எறிந்து நிறையாக கொண்டுவந்த 236 ஆடுகளை தானமாக கொடுத்துள்ளதை தெரிவிக்கும் இந்தக் கல்வெட்டு தற்போது புணரமைப்பில் இடம்பெயர்ந்து கோவிலின் டைல்ஸ் பூச்சுகளினுள்ளே புதையுண்டு கிடக்கிறது . கல்வெட்டின் நிலையும் கல்வெட்டுச்செய்தியும் படமாக இணைத்துள்ளோம். 

Monday, September 10, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 14

மகேந்திரர் சிற்பம்



திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் இன்று மலைக்கோட்டை என்றழைக்கப்படும் சிரா மலையில் வீற்றிருக்கும் உச்சிப் பிள்ளையாருக்குச் சற்று கீழாக தெற்குப் பார்த்தவாறு லலிதாங்குர பல்லவேஸ்வர கிருகம் என்ற பல்லவர் கால குடைவரை ஒன்று உள்ளது. பொஆ 6,7 ஆம் நூற்றாண்டிலே  தமிழகத்தையாண்ட பேராளுமை கொண்ட பல்லவனும் கல்வெட்டுக்களிலே லலிதாங்குரன், சத்ருமல்லன், விசித்திரசித்தன், சித்திரகாரப்புலி, கலகப்பிரியன், சங்கீர்ண ஜாதி, குணபரன் என்றழைக்கப் படுபவனுமான முதலாம் மகேந்திரவர்மன் எடுப்பித்த இக்குடைவரையில், தன் கால்களுக்கு இருபுறமும் மண்டியிட்டு அமர்ந்த மனித உருவங்களுடன் மேற்கு பார்த்தவாறு கங்காதரர் சிற்பம் ஒன்று உள்ளது.

அச்சிற்பத்திற்கு இருபுறமும் உள்ள வடமொழிக் கல்வெட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ள இப்பாடல் வடிவக்கல்வெட்டு மகேந்திர பல்லவன் சமயம் மாறிய செய்தியையும் அவ்வாறு மாறிய பிறகு எடுப்பித்த இக்குடைவரையில் மேற்சொன்ன கங்காதர சிற்பத்தின் இருபுறமும் உள்ள மனித வடிவங்கள் இரண்டும் அப்பல்லவனின் வடிவம் என்ற செய்தியையும் தாங்கி நிற்கிறது. மகேந்திரவர்மரே பெருமிதத்துடன் "இங்குத் தாணுவைத் தோற்றுவித்தேன். அவர் என்றும் அழியாத சிலையாகத் தோற்றமளிக்கிறார். அவரது அருகிலேயே எனது உருவையும் படைத்த நான், சிலையாக நின்று என்றும் அழியாத புகழடைந்து விட்டேன்" என்று கூறுவதாக அமைந்துள்ள   இக்கல்வெட்டுச் செய்தியை சற்று விரிவாகவும் கல்வெட்டில் உள்ளவரிகளை சற்று விளக்கமாகவும் திரு.குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் எடுத்துரைத்திருக்கிறார். அவர் விவரித்த கல்வெட்டுச் செய்தியைப் புகைப்படமாக இணைத்துள்ளோம். இன்று இக்கல்வெட்டின் சில பகுதிகள் சிதைந்து சில பகுதிகள் படிக்கும் நிலையில் உள்ளது. தொல்லியல் துறையினர் குடைவரைக்கு கதவு அமைத்து பராமரித்து வருகின்றனர்.