Monday, August 27, 2018

அறியப்படாத கோயில்கள் - 5

கூத்தப்பார் மருதீஸ்வரர் கோவில்


திருச்சி திருவெறும்பூரில் இருந்து  சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் இவ்வூர் கூத்தபெருமாள் நல்லூர் என்று அழைக்கப்படுகிறது.
இவ்வூர் இறைவன் மருதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இன்று இவ்வூர் கூத்தப்பார் என்று அழைக்கப்படுகிறது .

 இக்கோவிலில் உள்ள கோபுரம் மிக பிரமாண்டமாக அமைந்துள்ளது.  இக்கோவிலில்  மூன்றாம் ராஜராஜனின் 29வது ஆட்சியாண்டு கல்வெட்டு களில் 3 கிடைக்கப்பெற்றுள்ளன. கல்வெட்டுகளில் இவ்வூர் பாண்டிய குலாசனி வளநாட்டு மீகோழை நாட்டுக்கூத்து பெருமாநல்லூர் என்று குறிக்கப்படுகிறது. மேலும் தற்சமயம் புதியதாக பெருமண்டபம் கிழக்கு வடக்கு தாங்குதளத்தில் இரண்டாம் தேவராயர் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

 இக்கோவிலில் அளவை கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன. முன் மண்டபம் கிழக்கு சகதியில் புஞ்சை நஞ்சை என்ற இரண்டு குறிப்புகளுடன் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன இவ்வெழுத்து குறிப்புகள் 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டு குறியவையாக இருக்கலாம். கூட்டல் குறிக்கும் இரண்டுக்கும் இடையே  7.31 மீட்டர் இடைவெளி உள்ளது. அக்காலத்தே இப்பகுதியிலிருந்த நன்செய் நிலங்களை அளக்க பயன்படுத்திய நிலம் அளந்த அளவுகோலாகக் இதனை கொள்ளலாம். இக்கோவிலின் முதல்கல்வெட்டு கோவில்களுக்கிடையே நிகழ்ந்த இடப்பரிமாற்றம் பற்றி பேசுகிது. குலோத்துங்கசோழ வளநாட்டு திருப்பனையூர் நாட்டு சோமநாதபுரத்திலிருந்த சோமநாதர், விசுவேசுவரர், ஆகிய கோவில் தானத்தார் மற்றும் அவ்வூரின் மற்றொரு கோவிலான கவிவேதிசுவரர் கோவில் தானத்தாரும் இணைந்து தங்கள் கோவிலின்  பதிமூன்றே முக்கால் வேலி நிலத்தை  கொடுத்துள்ளனர். இக்கோவிலின் ஈசனுக்கு திருநாமத்துக்காணியாக பரிவர்த்தனை செய்து கொடுத்துள்ளனர்.

அப்படியளிக்கப்பட்ட நிலம் உலகனான விஜயாலய முத்தரையர் என்பவரால் கொடையளிக்கப்பட்டதாகும். மேலும் இச்சாசனம் சோமநாதர், திருநெடுங்களத்திலும் உள்ளது. மற்ற இரு கல்வெட்டும் நிலம் பரிமாற்ற தொர்பாய் உள்ளது. இக்கல்வெட்டில் குறிக்கப்படும் ஊர்கள் இன்றும் இப்பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.அவையாவன :
உப்பூரிக்குடி, திருநெடுங்களம், திருவையாறு,  மாங்குடி, மருதூர், கிளியூர்,  வலவூர், பாகன்குடி.

இக்கோவிலில் உள்ள முன்மண்டபத்தில் பவழசபை  என்று அழைக்கப்படும் 12 தூண்கள் காணப்படுகின்றன தூண்கள் ஒவ்வொன்றும் முச்சதுர இருகட்டுத் ஒன்றாக அமைந்துள்ளது. தூண்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வாத்தியக் கருவியை வாசிப்பது ஐதீகம்.

மேலும் இக்கோவிலில் உள்ள திருமஞ்சன நீர்வழி  என்னும் கோமுகை  மிகவும் பிரசித்தி பெற்றது. கீழே உள்ள சதுர தொட்டியின் மேல் புறம் ஒரு சிங்கத்தின் வாயில் இருந்து நீர் வெளிப்படும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் இரு பக்கவாட்டுகளிலும் பூதகணங்களை கொண்டுள்ளது. பணையோலைக் குண்டலங்கள், சரப்பள்ளி, உதரபந்தம்,  போன்றவை  அமையப் பெற்று பூதகணங்கள் மிகவும் அழகுற அமைந்துள்ளன. கிழக்குப் புறம் உள்ள பூதகணம் சிரட்டைக் கின்னரி வாசிப்பது போலவும்,  மேற்குபுறமுள்ள பூதம் வீணையை வாசிப்பதாகவும் உள்ளது. இவ்வழகிய கோவில் தமிழக அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. நன்முறையிலமைந்த கோவில் இன்னும் அருகேயுள்ள மக்களுக்கு தெரியாமலுள்ளது வருத்தத்திற்குரியது. இவ்வூரில் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ்பெற்றது. அதனைபோலே இக்கோவிலும் புகழ்பெற வேண்டும் என்பதே நம் அவா.




Thursday, August 9, 2018

அறியப்படாத கோயில்கள் - 4


சிற்றறையூர் என்னும் சித்தூர்
புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஓர் சிற்றூரே இன்று நாம் காண இருக்கும் கோவிலாகும். இறைவன் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கோவில் இது. தற்சமயம் சுற்றுசுவர் எழுப்பும் பணி நடந்து வருகிறது. கோவில் பூட்டி இருப்பினும் அருகிலுள்ளவர் துணையால் சென்று பார்க்கலாம்.

இக்கோவில் கல்வெட்டுப்படி இவ்வூர் ஒரு பிரம்மதேயமாக இருந்துள்ளது. இக்கோவில் கூடலூர் நாட்டின் கீழ் வருகிறது. இங்கு கிடைக்கும் கல்வெட்டுகளில் தொன்மையானதாக இராஜகேசரிவர்மனின் 4 ம் ஆண்டு கல்வெட்டு (வடபுறச்சுவரிலுள்ள சாசனம்)  கிடைத்துள்ளது. இவரை கண்டராதித்தன் என அடையாளம் கண்டுள்ளனர். இவரது அதிகாரியான மஹிமாலய இருக்குவேள் என்னும் பராந்தக வீரசோழன் என்பவர் இக்கல்வெட்டில் காணப்படுகிறார். சிதைந்த இக்கல்வெட்டின் மூலம் அவர் உவச்சர்களுக்கும் ஸ்ரீபலி கொட்டுவோர்க்கும் நிலம் தானமாய் கொடுத்ததை அறியமுடிகிறது.

கண்டராதித்தரது ஏழாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் இராசசிங்கன் உத்தமசீலனான மும்முடிச்சோழ இருக்குவேள் என்பவர் இக்கோவில் இறைவனுக்கு தேவதானமாக நலம் கொடுக்கிறார்.

அதன் பின் முதலாம் ராஜராஜர் கல்வெட்டுகள்  கிடைக்கின்றன. இவரது ஐந்தாம் ஆண்டு முதல் கல்வெட்டுகள் கிடைக்கிறது. அக்காலத்தில் இவ்வூர் கேராளந்தக வளநாட்டின் கீழ் வருகிறது. கோவிலின் வடபுற சுவர் ராஜராஜர் கல்வெட்டு ஒன்று  கீழ்வேங்கை நாட்டை சேர்ந்த புலியூரைச் சேர்ந்த கிழவன்  வைத்த நுந்தாவிளக்கு தானம் மற்றும் அவ்விளக்கு எரிய நெய்தானத்திற்கு கொடுத்த காசுகள் பற்றிய குறிப்புள்ளது.

இராஜராஜரது 22ம் ஆண்டு கல்வெட்டு(வடபுற சுவர்)
இறைவனுக்கு திருவமுதம் செய்ய கொடுத்த நிலதானத்தையும், இவ்வமுது நாநாழி அளவு இருக்கவும் இந்நிலங்கள் காச்சுவன் புல்லி ஆநந்தனுக்கும்,  புல்லி கூத்தனுக்கும், கீமுத்தனுக்கும், பாரதாயன நக்கன் வளவன் ஒற்றி என்பவர்ளுக்கும் கொடுத்து இதனை கல்வெட்டில் வெட்டியுள்ளனர்.

ராஜராஜரது 26 ம் ஆண்டு கல்வெட்டு(தென்புற சுவர்) இறைவனுக்கு பாண்டியகுலாசனி வளநாட்டு பெருவாயினாட்டு செட்டன் மாடலன் நக்கநாராயணன் நந்தா விளக்கு தானமளிக்கிறார். மேலும் இக்கல்வெட்டுக்கு அருகே இவரது சிதைந்த 26 ம் ஆண்டு கல்வெட்டுகள் இரண்டுள்ளன.

ராஜேந்திரசோழரின் மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் கேரளாந்தக வளநாடு ராஜராஜவளநாடு என மாற்றம் அடைகிறது.

இரண்டாம் இராஜேந்திரரின் சிதைந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது.

கோவிலின் கருவறை எண்கோண அமைப்பிலுள்ளது.. விமானம் தற்சமயம் இல்லை. கோவில் கட்டிய காலத்தில் இது நிச்சயம் மகோன்னதமாய் விளங்கியிருக்கும். சிகரத்திலுள்ள யாளி வரிகள் தொல்லியல்துறையால் சீரமைக்கப்பட்டுள்ளது.
பிரம்மா, விஷ்ணு, தவ்வை சிற்பங்கள் கோவிலின் முன் நிறுத்திவைக்க பட்டுள்ளன.