Thursday, May 31, 2018

தொல்லியல் எச்சங்கள் - 2

காலத்தின் ஓட்டத்தில் சிதைந்த சமணக் கற்றளி


புதுக்கோட்டை மாவட்டத்தில் சமணமதம் அதிக அளவில் வியாபித்திருந்ததற்கு பல சான்றுகள் இன்றும் உள்ளன. குவாரிகளினால் பல மலைகள் விழுங்கப்பட்டாலும், எஞ்சிய சில குன்றுகளில், படுக்கைகளும் தீர்த்தங்கரர் சிற்பங்களும், கல்வெட்டுகளும் உள்ளன. ஆங்காங்கே சில இடங்களில் தீர்த்தங்கரர் சிலைகளும் உள்ளன. சில கற்றளிகளும் இருந்துள்ளன. அவற்றில் முற்றிலும் சிதைவுற்ற ஒரு கற்றளியை இன்று காண்போம்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து கிழக்கு பக்கம் மலையடிப்பட்டி செல்லும் வழியில், கண்ணங்குடி என்னும் பிரிவுசாலையில் சுமார் 10 கி.மீ சென்று, அங்கிருந்து செட்டிப்பட்டி  என்று வழிகேட்டால் முதலில் காயாம்பட்டி என்ற ஊர்வரும், அங்கே  ஓர் தீர்த்தங்கரர் சிற்பம் தொல்லியல்துறையால் பராமரிக்கப்பட்டுவருகிறது.

அவ்வூரிலிருந்து சுமார் 2. கி.மீ ஒற்றையடிப்பாதையில் பயணித்தால் இக்கோவில் வரும். இருசக்கர வாகனம் மட்டுமே செல்ல முடியும். வழிநெடுக கருவேலமுட்கள் சூழ்ந்திருக்கும்.

முதலாம் ராஜராஜசோழர் கால கல்வெட்டு உள்ளது என ASI குறிப்புள்ளது, நாங்கள் தேடியபோது கிடைக்கவில்லை.  கல்வெட்டில் இக்கோவில் ஐந்நூற்றுவபெரும்பள்ளி என அழைக்கப்படுகிறது. ஊர்மக்களிடம் ஓட்டைக்கோவில் செல்லும்வழி என்று கேட்டால்தான் வழி சொல்லுவர்.இதிலுள்ள கோபுர அமைப்பு கொடும்பாளூர் மூவர் கோவிலை ஞாபகபடுத்துவதாக குறிப்புள்ளது.ஆகவே இக்கோவிலை பூதிவிக்ரமகேசரி கட்டியிருக்கலாம் என ASI கருதுகிறது.

தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளதென அறிவிப்புப்பலகை மட்டும் உள்ளது. மற்றபடி சாலைவசதி, மற்றும் விரிவான அறிவிப்புபலகையை முக்கிய இடங்களில் வைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இக்கோவிலின் எஞ்சிய முக்கிய பாகங்கள், தீர்த்தங்கரர் சிற்பங்கள் திருச்சி தொல்லியல்துறை அகழ்வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Friday, May 18, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 7


அரியலூர் மாவட்டம் கோவிந்தபுத்தூர் சிவன் கோயிலில் சைவ சமயத்தினுடைய தேவார இலக்கியம் தொடர்பான முக்கியக் கல்வெட்டொன்று உள்ளது. இந்நாளிலே கங்காஜடாதீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் பெரியஸ்ரீவானவன்மாதேவி சது ர்வேதி மங்கலத்து ஸ்ரீீவிஜயமங்கலத்து மகாதேவர் கோயிலில் திருஞானசம்பந்தர் பாடிய 

 "வாழ்க வந்தணர் வானவ ரானினம்     
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக     
ஆழ்க தீயதெல் லாமர னாமமே     
சூழ்க வையக முந்துயர் தீர்கவே" 

என்ற மூன்றாம் திருமுறைப் பாடலொன்று இங்கு கல்வெட்டாய் வெட்டப்பட்டுள்ளது. இதேபோன்று திருவிடைவாசலில் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் கல்வெட்டாக  வெட்டப்பட்டுள்ளது. ஆனால் அப்பதிகம் தேவாரத் தொகுப்பில் இடம்பெறவில்லை. இக்கோவிலில் சம்பந்தரும், நாவுக்கரசரும் பதிகம் பாடியுள்ளனர். "கொள்ளிடக்கரை கோவந்தப்புத்தூரில் வெள்விடைக் கருள் விஜயமங்கையே"  என அப்பர் பாடியுள்ளார். மேலும் இவ்வூரில் "திருத்தொண்டன் தொகையன் திருமடம்" என்ற மடம் அமைக்கப்பட்டு சைவநெறி வளர்க்கப்பட்டுள்ள செய்தியும் இக்கல்வெட்டில் உள்ளது.

இம்மடத்தை சிதம்பரத்தைச் சேர்ந்த கந்தாபரணர் என்பவர் பேரன் இடையாற்றுக்குடி சுப்பிரமணியசிவன் நிறுவியுள்ளார். இம்மடத்தில் வழிபாடு செய்வோருக்கும்,  ஸ்தானத்தார்களில்  வாரிசு இல்லாமல் வயதான காலத்தில் நலிந்து கிடப்போருக்கு பராமரிப்பு  செலவிற்கு இவர் பலரிடம் நிலம் வாங்கி மடத்திற்கு சேர்த்துள்ளார். மேலும் இவருக்கு பின்னர் இவரது சீடர்கள் இம்மடத்தை நிர்வகிக்கவும்,  அவர்களுக்கு வாரிசு இல்லையெனில் சிதம்பரத்திலிலுள்ள சந்தனமடமான திருத்தொண்டத் தொகையன் திருமடத்து மடாதிபதிகளால் நியமிக்கப்பட்டவர்கள் நிர்வகிக்க வேண்டுமென நிர்ணயம் செய்துள்ளார். மேலும் இம்மடத்துக்குரிய நிலங்களுக்கு யாரும் வரிவிதித்து வாங்கக்கூடாதெனவும், அவ்வாறு வாங்குவோர் சிவதுரோகிகள், குருதுரோகிகள் பட்டதண்டம் விதிக்கப்படுவார்கள், அதன்பின் அவர்கள் தங்கள் திரவியங்களுடன் ஊரைவிட்டு ஓடவேண்டுமென விதிகள் செய்துள்ளார். மூன்றாம் இராஜேந்திரனின் இரண்டாம் ஆட்சியாண்டைச் சேர்ந்த இவ்வரிய கல்வெட்டானது கோவிலின் இரண்டாம் பிரகாரத் தென்புறச் சுவற்றிலே நன்னிலையில் உள்ளது.

Friday, May 11, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 6

குடுமியான்மலை. புதுக்கோட்டையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் இது.  சங்காலத்தில் வழங்கப்பட்ட ஒல்லையூர் என்ற ஊரின் பெயரிலேயே பிந்தைய கல்வெட்டுகளிலும் ஒல்லையூர் கூற்றத்து குன்றியூர் நாட்டு திருநலக்குன்றம்  என்று இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. இங்கே புகழ்பெற்ற இசைக்கல்வெட்டும் பிரசித்தி பெற்ற குடைவரைக்கோவிலும் பாண்டியர் கால கோயில் கட்டுமானமும் நாயக்கர் கால சிற்பங்களும் நிறைந்துள்ளன. மேலதிக தகவல்களை பின்னொரு பகுதியில் விரிவாக காண்போம். இக்குடுமியான்மலையின் கீழ்பகுதியில் குடபோக கோவிலின் வரலாறு சற்றொப்ப 1400 ஆண்டுகள் பழமையெனில் அம்மலையின் பின்பகுதியில் சுமார் 2300 ஆண்டு பழமையான (பொயுமு 3ம் நூற்றாண்டு) தமிழி எழுத்து கல்வெட்டு காணப்படுகிறது. அதன் சிறப்பையும், அவலத்தையும் இங்கே காண்போம்.

மலையின் பின்புறம் சென்றால் கீழ்பகுதியில்   மதுரை சமண பண்பாட்டு குழுவினரின் மஞ்சள் வண்ண பெயர்ப்பலகை காணப்படுகிறது. அவர்களின் அரும்பணி பாராட்டுக்குரியது, ஆனால் தமிழி எழுத்துக்கள் அனைத்தும் சமணர்க்கு மட்டுமே உரியது என்பது  எங்ஙனம் ஏற்புடையது? சரி அவ்விவாதத்திற்குள் நுழைய வேண்டாம். அப்பெயர் பலகையைக் கடந்து சற்று மேலேறினால் வலப்புறத்தில் சில கற்படுக்கைகளும் சற்று மங்கிய நிலையில் ஒரு தமிழி கல்வெட்டும் காணப்படுகிறது. அக்கல்வெட்டின் விளக்கத்தை காண்போம்.
'நாழள் கொற்றந்தய் ப(ளி)ய்' என்பதே அதன் பாடமாக வரலாற்று அறிஞர்கள் கணித்துள்ளனர்.  நாழள் என்பது சங்ககாலத்தில் குறிஞ்சிப்பாட்டில் குறிக்கப்படும் மலர் வகைகளில் ஒன்று, இம்மலர் இன்று புலிநகக்கொன்றை, மயிற்கொன்றை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  இம்மலரின் பெயரில் அமைக்கப்பட்ட ஊரே இங்கு குறிக்கப்படுகிறது,  அந்தை என்பது மரியாதைக்குரிய சொல், கொற்றந்தை என்பவர் இங்கு மரியாதைக்குரியவராக காட்டப்படுகிறார். 'நாழள் ஊரினை சார்ந்த கொற்றந்தை என்பவர் செய்த பள்ளி' என்பதே இவ்வாசகத்தின் விளக்கம்.
இன்றைக்கு ஏறத்தாழ 2300 ஆண்டுகள் பழமையான எழுத்துருவெனில் இதன் முக்கியத்துவத்தை சொல்லி உணரத்தேவையில்லை,   இம்மாதிரி கல்வெட்டுகளால் தானே நம்மொழி செம்மொழியாயிருக்கும்.  இன்று இதன் நிலையாதெனில் இக்கல்வெட்டை அடையாளம் காண்பதற்கே சிரமப்பட வேண்டியுள்ளது, இதுவே உண்மை எற்கின்ற யதார்த்த நிலை முகத்தில் அறைகிறது. 1991ம் வருடம் இக்கல்வெட்டை கண்டறிந்து இன்றுடன் 27 வருடம் ஆகிறது. ஒரு தலைமுறை இடைவெளியில் அடையாளம் காண சிரமபட்டுள்ளோம். அடுத்த தலைமுறையில் இருக்குமா என்பதே சந்தேகம். காரணம் இவ்விடம் இன்று மது அருந்தும் கூடாரமாகிவிட்டது.  இவ்வெழுத்து பொறிப்பு அருகேயே இயற்கை உபாயம் கழிக்கும் இடமாக மாறிவிட்டது.  மதுபான புட்டி குப்பை, மனிதக்கழிவுகளை அப்புறப்படுத்தியே அதை காணவேண்டியுள்ளது கொடுமை.


இந்நிலை என்று மாறுமோ?