Showing posts with label முத்தரையர். Show all posts
Showing posts with label முத்தரையர். Show all posts

Saturday, March 24, 2018

சிற்றரசர் கல்வெட்டுகள் - 3

முத்தரையர்


நியமம் காளாபிடாரி
தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அந்நாளில் சந்திரலேகை சதுர்வேதிமங்கலம் என்றழைக்கப்பட்ட செந்தலை என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் முத்தரையர், முற்காலச்சோழர் மற்றும் பாண்டியர் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. நாம் இங்கே முத்தரையர் கல்வெட்டுகளின் செய்திகளைக் காண்போம். கோவில் குறித்து மற்றொரு பகுதியில் விரிவாகக் காண்போம்.
கோவிலின் முன்மண்டபத்திலுள்ள தூண்களில் நான்கு தூண்கள் இக்கோவிலுக்குரியவை அல்ல. அவை  கல்லணை - திருக்காட்டுப்பள்ளி இடையேயுள்ள நியமம் என்ற ஊரிலிருந்த காளாபிடாரிக் கோவிலின் தூண்களாகும். முத்தரைய மன்னன் சுவரன்மாறன் என்னும் பெரும்பிடுகு முத்தரையன் ஆயிரத்தளி எனப்படும் நியமத்திலே காளாபிடாரிக்கு கோயிலொன்று எடுப்பித்தான்.  இன்று கன்னிமார் கோவிலென்றும் பிடாரிக் கோவிலென்றும் ஊர் மக்களால் வழிபடப்படும் வயல்களுக்கிடையே உள்ள சிறிய மேடு தான் அந்நாளில் காளாபிடாரி கோவிலாக இருந்திருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கருதுகின்றனர். அன்று இங்கிருந்த கோவிலின் தூண்களைத்தான் இன்று செந்தலை சிவன் கோவில் முன்மண்டபத்திலே காண்கிறோம். இத்தூண்களில் காணப்படும் கல்வெட்டுகளில் சுவரன்மாறன் இப்பிடாரிக்கு கோவில் எழுப்பிய செய்தியும்,  அவரது வெற்றிகளும், அவரின் தந்தை மற்றும் பாட்டன் குறித்த தகவல்களையும் நாமறியலாம். மேலும் இத்தூண்களில் பெரும்பிடுகு முத்தரையனின் விருதுப்பெயரான, ஸ்ரீமாறன், ஸ்ரீசத்ருகேஸரி, ஸ்ரீகள்வர்கள்வன், ஸ்ரீஅதிஸாஹசன் போன்ற பெயர்களும் செய்யுள் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அச்செய்யுள் பாடல்களை,

1.பாச்சிள்வேள் நம்பன்
2.கோட்டாற்று இளம்பெருமானார்
3.கிழார் கூற்றத்து பவதாயமங்கலத்து அமருண்ணிலை ஆயின குவாவங்காஞ்சன்
4.ஆசாரியர் அநிருத்தர்

என்கின்ற நான்கு புலவர்கள் பாடுகின்றனர்.

கோட்டாறாற்றிளம் பெருமானார் பாடிய

"நிற்கின்ற தண்பணைந்தோன்று தஞ்சைத்திறம் பாடிநின்றார்
விற்கின்ற வீரர்கள் ஊர்கின்ற இப்பிணக்குன்றுகள்மேல்
நெற்குன்ற யானை ---------------------"

என்ற பாடலானது மிக ஓங்கிவளர்ந்த மூங்கில் தோன்றும் தஞ்சையின் சிறப்பைப் பாடி நின்ற புலவர்கள் பகைவருடைய பிணங்களை அடுக்கியதால் ஏற்பட்ட குன்றின்மேல், வில்லில் வல்ல வீரர்கள் ஊர்ந்துசெல்லும் நெற்போரைப்போல் காணப்படும்  யானைகளை பரிசு பெறுவர் என்று பொருள் தருகின்றது.

 "பாச்சிள்வேள் நம்பன்" பாடிய

"வஞ்சிப்பூச்சூடிய வாளமருள் வாகைப்பூக்
 குஞ்சிக் கமழ்கண்ணி கோமாறன்-தஞ்சைக்கோன்
கோளாளி மொய்பிற் கொடும்பாளூர் காய்ந்தெறிந்தான்
தோளால் உலகமளிக்கும் தோள்"

இரண்டாவது பாடலானது வஞ்சிப்பூ சூடி வாள்போரில் வெற்றிபெற்று, வாகைப்பூசூடிய கோமாறனும், தஞ்சைஅரசனும், சிங்கம் போன்று கொடும்பாளூர் பகைவரை கோபித்து கொன்றளித்தவருமாகிய சுவரன்மாறனின் தோள்களே இவ்வுலகை காக்கும் தோல்கள் என்று பொருள் தருகின்றது. இப்பாடலில் சுவரன் மாறனை  "தஞ்சைகோன்" என்று குறிப்பிடுவது,   விஜயாலயர் முத்தரையரிடமிருந்து தான் தஞ்சையை கைப்பற்றினார் என்கிற அறிஞர்களின் வாதத்திற்கு வலுசேர்க்கிறது.

அதேபுலவர்,

"சொற்புகு தொண்டை கனிபுகு தூமதி போன்முகத்தாள்
பொற்புக வெற்புப் பகுதிகண்டாய்ப்புக ழிபொருநாதார்
கற்புக விற்புகக் கண்டவன் கள்வர்கள்வன் தஞ்சை
நற்புக ழான்கரம் போற்கொடைக் காலுங் கருமுகிலே"
என்ற பாடலையும் பாடியிருக்கிறார். தலைவியிடத்தே மழைகாலத்தில் திரும்பிவருவேன் என்று கூறிச்சென்ற தலைவன் தனக்கு முன்பாக தலைவியிடத்தே செல்லும் கார்மேகத்தைப் பார்த்து, புகழி என்ற ஊரில் பகையரசனை தன் வில்லாற்றலாள் ஓடிஒளியச்செய்த கள்வர்கள்வன் எனும் பட்டமுடையவனும் தஞ்சையை நல்லபடியாக ஆளும் மன்னனாகிய சுவரன்மாறன் கைகளைப்போல் கைமாறு கருதாமல் கொடுக்கும் கார்மேகமே  சந்திரன் போல் பொலிவுடைய என் காதலி உன்வரவு கண்டு கார்காலம் வந்ததும் தலைவன் வரவில்லையே என்று ஏங்கும்படி செய்வது உனக்கு ஏற்றதன்று என்றுரைப்பதாக புலவர் பாடியுள்ளார்.  இதில் தஞ்சைஅரசன் என சுவரன்மாறனை சுட்டிகாட்டுகிறார்.

நான்காவது தூணில் ஆசாரியர் அநிருத்தர் இவ்வாறு பாடுகிறார்,

"மண்டீது கண்டான்தஞ்   சைசெம் புலநாட்டு வெண்கொடல்
விண்டபோது கொண்டாயர் மலையப் புதுமணல்மீது செந்தீத்
தண்டுகண் டாலன்ன கோவங்க ளூர்கின்ற தாழ்புறவே"

பகைவர்களுடைய நாடுகளை அழித்த சுவரன்மாறனின் செம்பூமியாகிய தஞ்சை நாட்டிலே ஆயர்கள் வெண்காந்தள் சூடியதையும், ஆற்றுப்புதுமணலில்  செந்நெருப்புபோல இந்திர கோபப்பூச்சிகள் ஊர்ந்து செல்கின்ற தாழ்ந்த முல்லைநிலப்பகுதியையும் காணலாம் என்பதிதன் பொருள். இப்பாடலில் தஞ்சையை செம்புலநாடென்றும் அது முல்லைநிலப்பகுதியெனவும் குறிக்கிறார்.

பாச்சிள்வேள் நம்பன் தான் பாடிய பாடலொன்றில் சுவரன்மாறனை "வல்லக்கோன்" என்கிறார்.

இத்தூண்களில் காணப்படுகின்ற கல்வெட்டுகளில்

1.பெரும்பிடுகு முத்தரையனான சுவரன்மாறனின் புகழ்பாடும் சாசனமும்
2.பாண்டியன் மாறஞ்சடையனின் 10 ம் ஆண்டு  (பொயு775) சாசனமும்
3.தெள்ளாறு எறிந்த நந்திபோத்தரையரின் 12ம் ஆண்டு (பொயு838) சாசனமும்
4.ராஜகேசரியின் 18ம்ஆண்டு (பொயு889) சாசனமும்
உள்ளன. இதில் மாறஞ்சடையனின் 775ம் ஆண்டை குறிப்பதால் அக்காலத்திற்கு முன்பே கோவில் எழுப்பியிருக்க வேண்டும். ஒரு கல்வெட்டிில் சுவரன்மாறனின் தந்தை, பாட்டனின் பெயர்கள் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளன.

1.பெரும்பிடுகு முத்தரையனான குவாவன் மாறன்
2.அவனுடைய மகன் இளங்கோவதியரையனான மாறன் பரமேஸ்வரன்
3.அவனுடைய மகன் பெரும்பிடுகு முத்தரையனாகிய சுவரன் மாறன்

மேலதிக தகவல்கள் :

1.தென்னிந்திய கல்வெட்டு சாசனம் தொகுதி:5
2.குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய தஞ்சாவூர்



Thursday, March 1, 2018

சிற்றரசர் கல்வெட்டுகள் - 2

முத்தரையர் - 2


புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மலையடிப்பட்டியில் இரண்டு குடைவரைக் கோயில்களும், அவற்றிற்குப் பின்னுள்ள குன்றின் ஒற்றைப் பாறையில் சமணக் கோட்டோவியங்களும் உள்ளன. குடைவரைகளில்  ஒன்று ஒளிபதி விஷ்ணு க்ரஹம் எனும் வைணவத்தலம் ஆகும். மற்றொன்று  வாகீஸ்வரர் என்ற சைவத்தலமாகும். இச்சைவத்தலமான வாகீஸ்வரர் கோவிலானது குவாவஞ் சாத்தனேன் என்ற முத்தரையரால் குடையப்பட்டது. முத்தரைய மன்னர்கள் எழுப்பிய சில கோவில்களில் இதுவும் ஒன்று. இச்செய்தியை உரைக்கும் கல்வெட்டானது இக்கோவிலிலுள்ள தூணில்  பொறிக்கப்பட்டுள்ளது. அது தரும் செய்தியிது,



1ஸ்வதிஸ்ரீ கோவிஜய நந்திபர்மருக்கு ஆண்டு பதி
2.னாறாவது விடேல்விடுகு முத்தரையனாகிய
3.குவாவஞ் சாத்தனேன் திருவாலத்தூர் மலை
4.தளியாக குடைந்து............ய்து
5.இத்தளியை...........
6...........கீழ் செய்ங்களி நாட்டு
7........ நாட்டார்க்கு செய்த....

சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான கோவிலிது.

Tuesday, February 27, 2018

சிற்றரசர் கல்வெட்டுகள் - 1




முத்தரையர் - 1


முத்தரசர் என்ற சொல்லினை முதன்முதலாக பெங்களூர், கோலார், தலைக்காடு பகுதிகளில் ஆண்ட கங்கர்களின் செப்பேட்டிலே காண்கிறோம். இவர்கள் கொங்கனி கங்கர் என அழைக்கபடுகின்றனர்.
பொயு 550-600 ன் இடைப்பகுதியில் ஆண்ட துர்விநீதன் என்பவர், முதல்பகுதியை சமஸ்கிருதத்திலும் மறுபகுதியை பழைய கன்னடத்திலும் (பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழிலேதான் இருக்கும்) கொண்ட இருமொழிச் செப்பேடு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அச்செப்பேட்டின்  சமஸ்கிருத பகுதியில் அவர் தன்னை "ஸ்ரீமத் கொங்கனி விருத்தராஜேன துர்விநீத நாமதேயன்" எனவும், அதே பகுதியை பழைய கன்னடத்தில் "ஸ்ரீ கொங்கனி முத்தரசரு" எனவும் குறிப்பிடுகிறார். பொயு 7ம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம்சிவமாறன் என்ற கங்க மன்னனும் இவ்வாறே முத்தரசர் என்று தன்னை அழைக்கிறார்.
சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் வேளிர்களில் கங்கரும் உள்ளனர். அகநானூறில் உள்ள ஒரு பாடலில் "நன்னன் ஏற்றை நறும்பூண் அந்தி துன்னரும் கடுந்திறள் கங்கர் கட்டி"(அகம்.44 ) என சிறப்பித்துக் குறிப்பிடபடுகின்றனர். இதில் குறிப்பிடப்படும் நன்னன் என்ற கங்கர், சோழன் ஒருவரோடு போரிட்டு தோற்றுள்ளார், சங்ககால கங்கர் கொங்கானத்தை ஆண்டு படிப்படியாக பெங்களூர், கோலார் வரை அரசை நிறுவினர். இந்த தரவுகளை வைத்து கங்கரே முத்தரையர்  எனக் கருதுகிறோம்.

முத்தரையர் வம்சாவளியினராக,
1.பெரும்பிடுகு முத்தரையனான குவாவன் மாறன்
2.அவர் மகன் இளங்கோவதியரையனான மாறன் பரமேஸ்வரன்
3.அவர் மகன் பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறன்
என மூன்று தலைமுறை முத்தரைய மன்னர்களைச் செந்தலை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
முத்தரையர்களின் அரசானது பல்லவர் காலத்தில் துவங்கி பின் பாண்டியர் மற்றும் பல்லவர்களின் ஆதரவில் வளர்ந்து பிற்காலசோழ பேரரசின் தலையெடுப்பில்  முடிவுற்றது. இவர்களின் அரசானது தஞ்சை மேற்குபகுதியிலிருந்து திருச்சிராப்பள்ளி வரையிலும், காவிரி வடகரையிலிருந்து புதுக்கோட்டையின் ஒரு பகுதி வரையிலும் நீண்டிருந்தது. முத்தரையரின் கல்வெட்டுகள் நேரடியாக செந்தலை, திருசென்னம்பூண்டி, திருசோற்றுத்துறை, மலையடிப்பட்டி நார்த்தாமலையிலும், பின்னர் அவர்கள் வேளிர்களுடன் கொண்ட திருமணமுறை குறித்து குடுமியான்மலை போன்ற சில இடங்களிலும், அதிகாரிகள், படைவீரர்கள் போன்ற நிலையை எய்தியமைக்கு சான்றாக சோழதேசத்தில் பல கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. அந்த கல்வெட்டுகள் குறித்த தகவல்களை வரும் பதிவுகளில் விரிவாக காண்போம்.
முதலில் எளிய கல்வெட்டொன்றோடு துவங்குவோம். படத்தில் உள்ள கல்வெட்டானது புதுக்கோட்டை மாவட்டம்  கிள்ளுக்கோட்டையில் இருந்து குன்றாண்டார் கோயில் செல்லும் வழியில் ஒரு கி.மீ தூரத்திலே, சாலையின் வலப்புறம் உள்ள களிகைக்கு எதிராக சாலையின் இடப்புறம் உள்ள சோளக்காட்டில் மறைந்துள்ளது.
இக்கல்வெட்டானது இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறனின் பட்டமான "கள்வர் கள்வன்", "சத்ருகேஸரி", "வாள்வரிவெங்கை" போன்ற பட்டத்தினை தாங்கியுள்ளது, ஆட்சியாண்டு காணப்படவில்லை.  இது தரும் செய்தியினை உறுதியாகக் கூறஇயலவில்லை.

தகவல்கள்:
1.Epigraphia indica vol 13(page 142)
2.Pudukottai state inscriptions
3.குடவாயில் பாலசுப்ரமணியம் (நந்திபுரம்,தஞ்சாவூர்)