Wednesday, October 31, 2018

புதுக்கோட்டைக்குடைவரைகள்-4

திருமெய்யம் (திருமயம்)

மூன்று குடைவரைகளையும் ஒரு கோட்டையையும் கொண்ட திருமயம் குன்றானது புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. உண்மையின் இருப்பிடம் என்னும் பொருளைத் தரும் திருமெய்யம் என்ற சொல்லானது காலப்போக்கில் மருவி திருமயம் என்றானது. முத்தரையர், சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், சிற்றரசர்கள், சேதுபதிகள், பல்லவராயர்கள், தொண்டைமான்கள் என பல்வேறுபட்ட அரசுகளால் ஆளப்பட்ட பகுதியிது. திருமயம் குன்றின் கோட்டைக்கு சற்று கீழாக மேற்பகுதியில் ஒரு சிவன் குடைவரையும், கீழே சிவனுக்கு ஒன்றும் திருமாலுக்கு ஒன்றுமென இரண்டு குடைவரைகளும் குடையப்பட்டுள்ளன.

மேற்குடைவரை



 நில மட்டத்திலிருந்து மூன்று ஆள் உயரத்திற்கு மேலான உயரத்திலே குடையப்பட்டுள்ள இக்குடைவரையை அடைவதற்கு ஏணி வைக்கப்பட்டுள்ளது. கருவறை மட்டுமே கொண்ட மேற்குப் பார்த்த குடைவரை. தாய்ப்பாறையிலமைந்த ஆவுடையுடன் லிங்கம் கொண்ட கருவறையின், வலப்புறத்தே சரிந்துள்ள பாறையில் செவ்கக் கட்டம் கட்டி எழுதப்பட்டுள்ள சிதைந்த கிரந்தக் கல்வெட்டானது பரிவாதினி என்று வீணையைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

சத்தியகிரீஸ்வரம்



சத்தியகிரீஸ்வரர் என்று இந்நாளில் அழைக்கப்படும் மெய்யம் மகாதேவர் கோயில் திருமயம் குன்றின் தென்புறச் சுவரில் அமைந்துள்ள இரண்டு குடைவரைகளில் ஒன்றாகும். குடைவரைக்கு முன்பாக அம்மன் சன்னதியும் பிற தெய்வங்களுக்கு சிறு சன்னதிகளும் மண்டபங்களும்  பிற்காலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.  கிழக்குப் பார்த்த கருவறையும் தெற்கு பார்த்த அர்த்த மண்டபமும் கொண்ட குடைவரையின் கருவறையிலே லிங்கமுள்ளது.



கருவறையின் இருபுறமுள்ள வாயிற்காவலர்களின்  சிற்பங்களும், கருவறையின் எதிர்ப்புறமுள்ள லிங்கோத்பவர் சிற்பமும் மிக அழகானவை.  தமிழகத்தின் பழமை வாய்ந்த லிங்கோத்பவர் சிற்பங்களில் இதுவும் ஒன்று. அர்த்த மண்டபத்தின் நடுவே கருவறையைப் பார்த்தவாறு நந்தி உள்ளது. குடைவரையின் வடசுவர் பாறையில் பரிவாதினி என்ற கிரந்தக் கல்வெட்டு செவ்வகக் கட்டம் கட்டி வெட்டப்பட்டுள்ளது. அதன் கீழே



'ஞ்சொல்லிய புகிற்பருக்கும்
.....தெமி முக்கந் நிருவத்துக்கும்
..ப்பியம்'

என்ற தமிழ்க் கல்வெட்டுள்ளது. இக்குடைவரையின் தென்புறச்சுவரிலே அந்நாளில் இசைக்கல்வெட்டு இருந்ததாகக் கருதப்படுகிறது. 13ஆம் நூற்றாண்டிலே இக்கல்வெட்டானது அழிக்கப்பட்டு அதன் மீது  சுந்தரபாண்டியனின் 7ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.



அழிக்கப்பட்ட கல்வெட்டின் எச்சங்கள் புதிய கல்வெட்டின் கிழக்கே எஞ்சியுள்ளன.  புதிதாக வெட்டப்பட்ட இக்கல்வெட்டிலேயே, அழிக்கப்பட்ட கல்வெட்டானது பாஷை அறியாத கல்வெட்டாக குறிக்கப்பட்டு அதையழித்த செய்தியும் உள்ளது. 47 வரிகளைக் கொண்ட இப்புதிய கல்வெட்டின் செய்தியைக் காண்போம்.



கல்வெட்டுச் செய்தி:

இக்கல்வெட்டானது திருமயம் சிவன் கோவில் நிர்வாகிகளுக்கும், திருமால் கோயில் நிர்வாகிகளுக்கும் இடையே கோயில் வருவாய் பங்கீட்டு தொடர்பாக பிணக்கு ஏற்பட்டு நீநாளாய் நிலவிவந்த சச்சரவை தீர்த்து வைத்து சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதை உரைக்கின்றது. இரு கோயில் அதிகாரிகளும் ஊரதிகாரிகளும் சூழ ஹோய்சாள அரசரின் தண்டநாயக்கரும் அந்நாளில் இந்நாட்டை பிடித்தவருமான (திருமயம் ஊரானது இவ்வழக்கு நடைபெற்ற காலத்தில் கானநாட்டின் ஒரு பகுதியாக இருந்தது)  இரவிதேவரின் மைத்துனன் அப்பண்ண தண்டநாயக்கர் முன்னிலையில் சபையோர் ஒருமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் சாராம்சமானது

1. மெய்யத்திலும் அதன் பிடாகைகளிலுமுள்ள நிலங்களின் விளைச்சலில் நிலவரியாக கோயில் கொள்ளும் நெல் முதலில் 3/5 பங்கினை திருமால் கோவிலான நின்றருளிய தேவர் கோவிலும், 2/5 பங்கினை சிவன் கோவிலும் பிரித்துக்கொள்வது.
2. அருகருகிலிக்கும் இவ்விரண்டு கோவில்களையும் பிரிக்க நடுவே ஒரு முழ அளவுள்ள மதில் எழுப்ப வேண்டியது, அதற்காக ஆகும் செலவுகளை வாங்கும் வரிகளின் அடிப்படையில் இரு கோவில்களும் பிரித்துக் கொள்வது.
3. இரு கோயில்களுக்கும் தனித்தனியாக நீர்நிலை ஒதுக்கப்பட்டு, அதிலிருந்து தூர்வை வாங்கும் போது இரு கோயிலாரும் கண்காணியிட்டு வாங்குவது.
4. இரு கோவில்களுக்கான எல்லைகள் பிரிப்பு. இதிலும் ஒதுக்கப்பட்ட நிலப்பகுதியானது 3/5 பங்கு திருமால் கோவிலுக்கும், 2/5 பங்கு சிவன் கோவிலுக்கும் பிரிக்கப்பட்டது.
5. உவச்சர்களுக்கு நிலக் காணியாக அளிக்கப்பட்டிருந்த திருமால் கோவில் நிலங்கள் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் கோயிலுக்கே உடமையாக்கியது. மேலும் உவச்சர்களை இரு கோயிலாரும் தேவைக்கேற்ப பணியமர்த்திக் கொள்வது.
6. நின்றருளிய தேவர் கோவிலுக்கும் இவ்வூரிலிருந்த வானவன்மாதேவி ஈஸ்வரம் என்ற கோயிலுக்கும் நிலப்பரிமாற்றம் நிகழ்ந்தது.
7. இந்நாட்டாரும் அப்பண்ண நாயக்கரும் இரு கோயில்களுக்கும் நிலங்களைக் கொடையாக நீர்வார்த்தளித்தது.
8. சிவன் கோவிலுள்ள திருமால் கோயில் தொடர்பான கல்வெட்டுகளை திருமால் கோயிலார் படியெடுத்து தம் கோவிலில் வெட்டிக் கொள்வது அவ்வாறே சிவன் கோவிலாரும் செய்வது. இதை ஏற்காதோர் அரசிற்கு இருநூறு அச்சு தண்டம் செலுத்த வேண்டியது.

மேலும் இக்கல்வெட்டில் பழங்கல்வெட்டுகளை அழித்த செய்தியையும் பதிவு செய்துள்ளனர். சிவன் கோயில் வாசலின் கீழ்ச் சுவற்றின் ஒரு கல்வெட்டும், அதனருகே இருந்த பாஷை அறியாத கல்வெட்டும் (இசைக் கல்வெட்டு?), பெருமாள் கோவிலிலிருந்த ஒரு கல்வெட்டும் அழிக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு உரைக்கின்றது. இந்த கல்வெட்டின் பிரதியொன்று கோயில் வளாகத்திலுள்ள சுனைக்கு வடபுறமுள்ள பாறையில் வெட்டப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் சொல்லகராதி:

பிடாகை - பெரிய ஊருக்குச் சேர்ந்த சிற்றூர்; தூர்வை - சேறு முதலியன; கண்காணி - மேற்பார்வையாளர்; உவச்சர் - இசைக் கலைஞர்; நிலக் காணி - நில உரிமை;

சத்தியமூர்த்தி




சத்தியமூர்த்தி என்று இந்நாளில் அழைக்கப்படும் வைணவக் கோவிலானது சிவன் கோவிலின் கிழக்கே மதிற் சுவரால் பிரிக்கப்பட்டு,  மெய்யம் பள்ளி கொண்ட பெருமாள் குடைவரையுடன், சத்திய மூர்த்தி சன்னதியும், உஜ்ஜீவனத் தாயார் என்ற அம்மன் சன்னதியும், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள் என பிற தெய்வங்களுக்கென தனி சன்னதிகளும், மண்டபங்களும் கொண்ட பெரு வளாகமாக திகழ்கிறது. இங்குள்ள சன்னதிகளுள் காலத்தால் முந்திய பள்ளி கொண்ட பெருமாள் குடைவரையானது கோயிலின் மேற்குச் சுற்றின் முடிவிலே, குடைவரையை சிவன் கோவிலில் இருந்து பிரிக்கும் மதிற்சுவருக்கு அருகாமையில் திருமயம் குன்றின் சரிவில் தெற்கு பார்த்து உள்ளது. கருவறையிலுள்ள பெருமாள் சிற்பம்  வலக்கையை நீட்டியவாறு ஆதிசேஷனாகிய ஐந்தலை நாகத்தினைப் படுக்கையாகக் கொண்டு கிடந்த நிலையில் உள்ளது. இச்சிற்பத்திற்கு பின்னாக பெருமாளின் தொப்புள் கொடியிலிருந்து பிரம்மனும், மார்பருகே திருமகளும், காலில் நிலமகளும் உள்ளனர். நான்முகனை நடுவாய் கொண்டு சந்திரனில் துவங்கி, மார்க்கண்டேர், பொந்து முனிவர்கள், கருடன், தேவர்கள், காலருகே அரக்கர்களான மது, கைடபர், இறுதியாக சூரியன் என நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், திருமகளையும் நிலமகளையும் கடத்த முற்பட்ட மது கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஐந்தலை நாகத்தின் சீற்றத்திற்கு பயந்து திரும்பியோடிய புராணத்தை உரைக்கும் விதமாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் காலத்தால் முந்தியதாவது குடைவரைக்கு வெளியே கிழக்காக, இரும்புக் கதவின் துணைகொண்டு பாதுகாக்கப்படும், பிடிச்சுவரில் செதுக்கப்பட்ட பெருந்தேவிக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டு உரைக்கும் செய்தியை இனிக் காண்போம்.



கல்வெட்டுச் செய்தி:

பொயு 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் இக்கல்வெட்டு விடேல் விடுகு முத்தரையன் என்றும் விழுப்பேர் அதியரைசன் என்றறியப் படும் சாத்தன் மாறனின் தாய் பெரும்பிடுகுப் பெருந்தேவி கோயிலொன்றை புதுப்பித்த செய்தியையும், தாம் புதுக்கிய கோயிலுக்கு உண்ணாழிகைப் புறமாக அண்டக்குடி  என்னும் ஊரைக் காராண்மை மீயாட்சி உள்ளடங்க கொடையளித்த செய்தியையும் சொல்கிறது.  (பெருந்தேவி எதைப் புதுப்பித்தார் என்று கல்வெட்டிலில்லை, கோயிலென்று கொள்கின்றனர்)

கல்வெட்டு சொல்லகராதி:

உண்ணாழிகைப் புறம் - கருவறைச் செலவுக்கு விடப்பட்ட நிலம்; காராண்மை - பயிரிடும் உரிமை; மீயாட்சி - நிலத்தின் மீதுரிமை;

திருமயம் குன்றின் மீது 17 ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதியின் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை ஒன்றும் உள்ளது.

0 comments:

Post a Comment