Wednesday, April 25, 2018

மங்கைக்கோயில்கள்-6

புள்ளமங்கை-3


யானைமுகத்தான்


வடமொழியிலே கணபதியென்றும் விநாயகரென்றும் தென் தமிழிலே பிள்ளையார் என்றும் யானைமுகன் என்றும் நாம் அழைக்கின்ற ஒரு கடவுள், சங்க இலக்கியத்திலே காணப்படாத ஒரு கடவுள், சங்கம் மருவிய காலத்திலே எப்போது தமிழகம் வந்ததென நாமறிய இயலாத ஒரு கடவுள், கிடைக்கப்பெற்ற வரலாற்றின் சிறு வெளிச்சத்திலே ஆறாம் நூற்றாண்டினில் இங்கு வந்தேறியதாக நாம் அறியும் ஒரு கடவுள், பின்னர் மிக வேகமாக வளர்ச்சி பெற்று, இன்று தெருவுக்குத் தெரு குழந்தைகளின் விருப்பக் கடவுளாக மிகுந்த செல்வாக்குடன் நம்மிடையே வீற்றிருக்கிறார். பிள்ளையார் என்றவுடன் நம் நினைவிற்கு முதலில் வருவது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார்ப் பட்டி குடைவரை சிற்பம் தான். நாம் பார்க்க இருக்கும் சிற்பமானது இதிலிருந்து தோராயமாக முந்நூறு ஆண்டுகள் பிந்தைய சிற்பமாகும்.
இது தஞ்சை மாவட்டம் திருப்புள்ளமங்கை கோவிலின் அர்த்த மண்டபத் தென்புறச் சுவற்றிலே கோட்டச் சிற்பமாக வீற்றிருக்கிறது. இங்கே பூதங்களின் தலைவனான யானை முகத்தான் சிற்பமும் அவருக்கு சேவை செய்யும் பூதங்களின் சிற்பங்களும் சிறந்த வேலைப்பாட்டுடன் செதுக்கப்பட்டுள்ளன. கோட்டத்தின் உள்ளே இரு கந்தர்வச் சிற்பங்கள் ஒரு கையில் மலரும் மறு கையில் வாழ்த்துவது போன்ற முத்திரையும் கொண்டு  தலைக்கு மேலிருந்து வாழ்த்த, நன்கலங்கரிக்கப்பட்ட முத்துத்தாமக் குடையின் கீழே, தாமரை பீடத்தின் மீது லலிதாசனத்தில் அமர்ந்திருக்கிறார் யானைமுகத்தான்.
லலிதாசனம் என்பது இரண்டு கால்களையும் பீடத்தின் மீது வைத்து, ஒரு காலை மடக்கிப் பீடத்தின் மீது படுக்கையாகக் கிடத்தி மற்றொரு காலை மடக்கி பீீடத்தின் மீீது நிறுத்தி அமர்ந்திருக்கும் ஒருவகை ஆசனம் ஆகும். நான்கு கைகள் கொண்ட யானைமுகத்தான், தலையிலே கரண்டமகுடமும், வலப்புறம் தந்தமின்றியும் இடப்புறம் உடைந்த தந்தமும், துதிக்கையிலே கொழுக்கட்டையும் கொண்டு காட்சி தருகிறார். பின்னே திருவாசி உள்ளது. வலமுன் கையில் கொழுக்கட்டையும் வலபின்கையில் உடைந்த தந்தமும் இடபின்கையில் மலர்த்தோகை போன்ற ஒன்றும் உள்ளன. இடமுன் கையானது வெறுமனே தொடையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளது. பின் கைகள் இரண்டும் கடக முத்திரை கொண்டுள்ளன.
கடக முத்திரை என்பது கைத்தலத்திலிருந்து பெருவிரலை நீட்டி உள்முகமாக சிறிது வளைத்து, நடுவிரலையும் மோதிர விரலையும் ஒன்றாக இணைத்து முன்னோக்கி வளைத்து, சுட்டு விரலையும் சுண்டு விரலையும் தனது இடங்களில் நிறுத்தி மேற்கணுக்களை சற்று வளைத்துப் பிடிப்பதாகும். இதில் நடுவிரலின் நுனியானது மோதிர விரலின் நுனியுடன் சற்று முன்னோக்கி அமைதல் வேண்டும். இம்முத்திரையின் புறத்தோற்றம் நண்டின் வடிவத்தை ஒத்திருக்கும். சிற்பங்களிலே ஆயதங்களைப் பெற்றிருக்கும் கைகள் பொதுவாக இம்முத்திரையைக் கொண்டிருக்கும். யானைமுகத்தான் கழுத்திலே முத்துமாலையும் உடலிலே குறுக்காக முப்புரிநூலும் இடையாடையும் காலிலே சிலம்பும் தரித்துள்ளார்.
யானை முகத்தான் சிற்பத்திற்கு இரு புறமும் கோட்டத்திற்கு வெளியே மூன்றடுக்கு கொண்டு, பக்கத்திற்கு நான்காக எட்டு பூதகணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.  கோட்டத்திற்கு வலப்புற மேலடுக்கிலே பூதமொன்று வாயைப் பிளந்தபடி மெய்மறந்து இசைக்கருவிகளை வாசித்தபடி உள்ளது. அதற்கு நேரெதிரே இடப்புறமுள்ள சிற்பத்திலே மூக்கிலே நீண்ட கயிறு கட்டப்பட்ட எலியொன்றும், அக்கயிற்றின் நுனியை இடக்கையிலே கடக முத்திரை கொண்டு பிடித்தவாறு வலக்கையால் இறைவனிருக்கும் திசையைக் காட்டியபடி, காதிலே குண்டலங்கள் அணிந்த பூதமொன்றுள்ளது.

வலப்புற நடு அடுக்கிலே மேலுள்ள பூதத்தின் இசையைக் கேட்டு ரசித்தபடி ஒரு கையில் கடக முத்திரை காட்டி சாமரம் ஏந்தி வீசிக் கொண்டும் மறு கையில் வாழ்த்துவது போன்ற முத்திரையும் கொண்ட பூதமொன்று காட்சி தருகிறது. அதற்கு நேரெதிரே இடப்புறமுள்ள சிற்பத்திலே வலக்கையில் வாழ்த்து முத்திரை காட்டி இடக்கையில் கொழுக்கட்டை நிறைந்த பாத்திரம் ஏந்தி இசையினை ரசித்த வண்ணம் பூதமொன்றுள்ளது. இருபுறமுள்ள கீழடுக்கிலே பக்கத்திற்கு இரண்டு பூதங்களாக நான்கு பூதங்கள் இடம்பெற்றுள்ளன. வலப்புறமுள்ள இரு பூதங்களில் ஒன்று பலாப்பழம் போன்ற ஒன்றை அரிவது போன்றும் அதை மற்றொரு பூதம் இடக்கையில் ஒரு பழத்துடன் பார்ப்பது போன்றும் உள்ளது.

 இடப்புறமுள்ள இரண்டு பூதங்களின் இடக்கைகளிலே பழங்கள் உள்ளன. அவற்றில் பின்னுள்ள பூதத்தின் வலக்கை மறைந்தும் முன்னுள்ள பூதத்தின் வலக்கையானது இறைவனைச் சுட்டுவது போன்றுமுள்ளது. இடப்புற மேலடுக்கிலுள்ள பூதத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து பூதங்களும், தலைகள் நன்கு அலங்கரிக்கப்பட்டும், உடலிலே குறுக்காக முப்புரிநூல் தரித்தும், லலிதாசனத்திலே அமர்ந்துள்ளன. கோட்டத்தின் மேற்புறத்தை யாளி வரியும் பூத வரியும் கொண்ட மகர தோரணம் அலங்கரிக்கின்றது. தோரணத்தின் நடுவே சண்டேச மூர்த்தியின் சிற்பமுள்ளது. இங்குள்ள இச்சிற்பக் காட்சி காண்பதற்கு அரிதான ஒன்றாகும்.

Sunday, April 22, 2018

kingraja: பழுவேட்டரையர்கள் பிற்காலசோழர்களின் சரித்திரத்தில...

kingraja: பழுவேட்டரையர்கள் 

பிற்காலசோழர்களின் சரித்திரத்தில...
: பழுவேட்டரையர்கள்  பிற்காலசோழர்களின் சரித்திரத்தில் மிகவும் கவனிக்கத்தக்க சிற்றரசர்களிலே கீழப்பழுவூர் மேலப்பழுவூர்  பகுதிகளை தலைமையகமாகக்க...

புதுக்கோட்டைக்குடைவரைகள்-3

மாங்குடி



சிறிது காலம் முன்பு இணையதளம் வாயிலாக நம் நண்பர்கள் ஒன்றிணைந்து நல்லறம் ஆற்றிய வயலோகம் அருகேயுள்ளது இக்குடைவரை. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் இருந்து வயலோகம் செல்லும் வழியில் மன்னைவேளார் பட்டிக்கு முன்பாக இடதுபுறம் வளைந்தால் சுமார் இரண்டு கி.மீ தொலைவிலே மாங்குடி என்னும் ஊர் உள்ளது. இங்கு சென்று குடைவரை கோவில்  என்று விசாரித்தால் உள்ளூர்வாசிகளே திணறுவர். பிள்ளையார் கோவில் என்றால்தான் வழி சொல்லுவர். அங்குள்ள சிறிய பாறைத்தொடர் ஒன்றிலே இந்த எளிய குடைவரை அமைந்துள்ளது. இக்குடைவரையானது மூன்று பாகமாய் அகழப்பட்டுள்ளது. முகப்பு, அகலம் குறைந்த முன்பண்டம், கருவறை என குடையப்பட்டுள்ளது. முகப்பு பகுதி அலங்காரம் ஏதுமின்றி வெட்டப்பட்டுள்ளது, கல்வெட்டுகளோ சிற்பங்களோ ஏதுமில்லை.
முகமண்டபமும் வடக்குச்சுவரும் முழுமையடையாமலும், தெற்குச்சுர் முழுமையடைந்தும் அழகுற வெட்டப்படாதும் உள்ளது. கருவறைவாயிலின் முன்பு படிகள் ஏதுமில்லை, உட்புறம் சதுரக்கோட்டமானது சிறிது ஆழமாய் வெட்டப்பட்டுள்ளது.  இதனுள் இலலிதாச இடம்புரி பிள்ளையார் செதுக்கப்பட்டு காட்சியளிக்கிறார். குடைவரையின் மற்ற பாகங்களை நோக்குகையில் இவர் காலத்தினால் சிறிதுபிற்பட்டவராகவே தோற்றமளிக்கிறார்.
பின்கையில் அங்குசமும், பாசமும், வலமுன்கையில் தந்தம் ஏந்தியும் அருளிக்கிறார். கரண்டமகுடமணிந்துள்ளார். உடைந்த அம்மன் சிலை ஒன்று குடைவரையின் இடப்புறம் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இக்குடவரையில் கல்வெட்டுகள், மற்றும் கட்டுமான உறுப்புகள் ஏதுமில்லாததால் இக்குடவரையின் காலத்தை கணிப்பது அரிது.
Reference :
 புதுக்கோட்டை குடைவரைகள்
(மு.நளினி, இரா.கலைக்கோவன்)

Friday, April 6, 2018

மங்கைக்கோயில்கள்-5

புள்ளமங்கை - 2


கொற்றவை


புள்ளமங்கை கோயில் அர்த்த மண்டபத்தின் வடபுறச் சுவற்றிலே கோட்டச் சிற்பமாக பழையோள் என்று நாமழைக்கும் கொற்றவைச் சிற்பம் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கொற்றவைச் சிற்பங்களிலே காலத்தால் முந்தியதாக வல்லம் குடைவரைச் சிற்பத்தினை உரைக்கின்றனர். அதற்கும் முந்நூறு ஆண்டுகள் பிந்தைய புள்ளமங்கைக் கொற்றவையானது நம்மிடமுள்ள சிறந்த கொற்றவைச் சிற்பங்களிலேயொன்று. தலையில் கரண்ட மகுடமும், நெற்றியிலே நெற்றிப் பட்டமும், செவிகளிலே குண்டலங்களும், முதுகின் பின்புறமிரு அம்பறாத்தூணியும், எட்டுக் கைகளிலே ஐந்தினில் வில்லும், கேடயமும், மணியும், வாளும், சூலமும் ஏந்தி எஞ்சியவற்றில் முத்திரை காட்டி, மார்பிலே கச்சிட்டு மேலே முத்துமாலை அணிந்து இடையிலே ஆடை கட்டி, பெரிய எருமைத் தலையின் மேலே இடக்காலை நேர் நிறுத்தி வலக்காலை சற்றொடித்து அலங்காரக் குடையின் கீழே போர்க்கோலம் கொண்டு நிற்கின்றாள் கொற்றவை.
இவ்வன்னையின் பெயரை தொல்காப்பியமும் கலித்தொகையும் பரிபாடலும் உரைப்பினும், சிலப்பதிகாரத்திலே மதுரைக் காண்டத்தில் வரும் வேட்டுவ வரி தான் இவளது உருவை முதன் முதலாக நமக்கு எடுத்துரைக்கிறது. அக்குடிக் காப்பியம் உரைக்கும் கொற்றவையை கற்பனையில் விரித்தால் நாமடையும் உருவம் நம்மை மிரளச் செய்கிறது. சிலம்பு காட்டும் கொற்றவையின் கரண்ட மகுடமானது சிறிய பாம்பின் வடிவம் கொண்ட பொன் நாணால் கட்டப்பட்டு அதன் மேலே வலிய பன்றியின் கொம்பானது பிறை போன்று வைக்கப்பட்டிருக்கும். இங்கவையில்லை. வலிய புலியின் வாயைப் பிளந்து பெற்ற அதன் பற்களால் கோர்க்கப்பட்ட தாலி இங்கில்லை. சிலம்பின் கொற்றவை மார்பின் கச்சையென பாம்பினை முடிந்திருப்பாள். புலித்தோலையும் சிங்கத்தோலையும் இடை ஆடையாக்கி இருப்பாள். அவள் வில்லின் நாணும் வாசுகியாவாள். இங்கவையில்லை. கால மாற்றத்தில் இங்குள்ள கொற்றவையின் முகம் சற்று மங்கியுள்ளது. ஆயினும் தான் கொண்ட போர்க்கோலத்தினால் இச்சிற்பம் நம்மை மிரளச் செய்கிறது.
 
கொற்றவைக்கு இரு புறமும் தன்னுயிரைக் கொடை அளித்திடும் உயர்ந்தோர் இருவரின் சிற்பங்கள் உள்ளன. இவர்களைப் போன்ற உயர்ந்தோர் புரியும் செயல்களை, கலிங்கத்துப்பரணியில் கோயில் பாடியது எனும் பகுதியிலேயுள்ள 
'அடிக் கழுத்தி னுடன் சிரத்தை அரிவராலோ;
அரிந்த சிரம் அணங்கின் கைக் கொடுப்பராலோ;
கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ;
குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ.'
என்ற 111 வது பாடல் எடுத்துரைக்கிறது. கோட்டச்சிற்பத்திற்கு வலப்புறம் மயிர்கள் படிந்த தலையும் சுழித்த வாலும் கொண்ட சிங்கமொன்றும் இடப்புறம் குள்ள பூதமும் அதனருகே நீண்ட கொம்புடன் கூடிய மானும் உள்ளன. கோட்டத்தின் மேலுள்ள மகர தோரணத்தில் உமையோடு இறைவன் காட்சி தருகிறார். சிற்பங்கள் தொடரும்.

Tuesday, April 3, 2018

மங்கைக்கோயில்கள் - 4

 புள்ளமங்கை - 1


மங்கைக் கோயில்களில் இறுதியாக நாம் பார்ப்பது, கல்வெட்டுகளிலே கிழார்கூற்றத்து பிரம்மதேயம் புள்ளமங்கலத்து திருவாலந்துறையார் மகாதேவர் கோயில் என்றழைக்கப்படும் புள்ளமங்கைக் கோயிலாகும். சப்த மங்கைகளில் சாமுண்டி வழிபட்ட தலமாக இதைக் கருதுகின்றனர்.  இக்கோயிலானது தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 14 கி.மீ தொலைவிலுள்ள பசுபதி கோயிலுக்கு தெற்கே அமைந்துள்ளது. இந்நாளில் பிரம்மபுரிஸ்வரர் என்றழைக்கப்படும் இக்கோயில் இறைவன் கல்வெட்டுகளிலே ஆலந்துறை மகாதேவர் என்றழைக்கப்படுகிறார். ஆலம் என்பதற்கு நீர் என்றும் ஆலமரமென்றும் இருவிதமாகப் பொருள் கொள்ளலாம்.

முதலாம் பராந்தகர் காலத்தில் கட்டப்பட்ட நாகரபாணியில் அமைந்த கிழக்குப் பார்த்த கோயிலிது. கோயிலின் கருவறையும் அர்த்தமண்டபமும் சோழர் காலத்தியதாகும். முன் மண்டம், மகா மண்டபம், பிரகார மண்டபம், கோபுரம், பிற்காலத்தே கட்டப்பட்டது. முழுவதும் கல்லினால் ஆன,  மூன்று தளங்கள் கொண்ட சதுர வடிவ விமானம் கொண்டது.
 சேதமடைந்திருந்த விமானத்தின் சிகரத்தை  பின்னாளில் செங்கற்சுதையால் கட்டியிருக்கின்றனர். கோயிலின் வடகிழக்கே  பிரகார மண்டபத்தில் அம்மன் சன்னதியுள்ளது. இச்சன்னதி விசயநகர காலத்திற்கும் பிந்தையதாகக் கருதப்படுகிறது. இங்குள்ள இறைவியின் பெயர் அல்லியங்கோதை எனும் சௌந்தரநாயகி. கோயிலின் மேற்புரம் சுப்ரமணியர் சன்னதியும் வடப்புறம் சண்டிகேசர் சன்னதியும் அமைந்துள்ளன. முகமண்டபத்தின் வடபுறத்தேயுள்ள நடராசர் சன்னதியும் மூன்று தளம் கொண்ட வெளிக்கோபுரமும் பிற்காலத்தியதாகும்.

இக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். 

'பாலுந்துறு திரள்ஆயின பரமன்பிர மன்தான்
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.'

என்பதை முதல் பாடலாகக் கொண்டு, திருஞானசம்பந்தரால் தேவாரத்தின் முதல் தொகுதியிலே பதினோறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. தேவாரப் பாடலிலே இவ்வூர் திருப்புள்ளமங்கை என்றும் இறைவன் ஆலந்துறை மகாதேவர் என்றும் குறிக்கப்படுகிறார். திருஞானசம்பந்தர் இவ்வூரைக் காவிரிக் கரையில் அமைந்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகவே குறிப்பிடுகின்றார். இக்கோயில் சிற்பங்களின் சிறப்பையும் இங்குள்ள கல்வெட்டுகள் உரைக்கும் செய்திகளையும் அடுத்தடுத்த பகுதிகளில் காணலாம்.