Saturday, July 28, 2018

தொல்லியல் எச்சங்கள் - 5

காலத்தால் முற்பட்ட தமிழிக் கல்வெட்டு :


வரலாற்றுச் சிறப்புமிக்க புலிமான் கோம்பை கல்வெட்டுகளைச் சமீபத்தில் காண நேர்ந்தது. இக்கல்வெட்டுகளைக் கண்டெடுக்கும் வரையில்  முதல் தமிழிக் கல்வெட்டாக சங்ககாலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் காலத்தைச் சேர்ந்த மாங்குளம் கல்வெட்டைக் கருதி வந்தனர். ஆனால் 2006 ல்  தேனிமாவட்டத்திலுள்ள புலிமான்கோம்பை (புள்ளிமான் கோம்பை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டுகள் பொஆமு 4 ம் நூற்றாண்டு வரை பழமையானது என கருதப்படுகிறது.
இக்கல்வெட்டுகள் தமிழ்பல்கலைகழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறையைச் சார்ந்த யத்தீஸ்குமார் மற்றும் பாலமுருகன் தலைமையில் கண்டறியப்பட்டது. பொதுவாய் கருதப்படும் பொஆமு 3 ம் நூற்றாண்டிற்கு முன்பாகவே தமிழகத்தில் தமிழி இருந்து வந்துள்ளது என்பதற்கு இக்கல்வெட்டுகள் ஒரு சான்றாகும்.

முதல் கல்வெட்டு



'.. அன் ஊர் அதன்
..ன் அன் கல் '

என்று சிதைந்துள்ளது முதல்கல்வெட்டு. ஒரு ஊரைச் சார்ந்த ஒருவருக்கு எடுக்கப்பட்ட கல் என்ற இதற்குப் பொருளுரைக்கின்றனர்.

இரண்டாம் கல்வெட்டு



'வேள் ஊர் அவ்வன் பதவன்'

என்றுள்ளது இரண்டாம் கல்வெட்டு. இதில் வேள் என்பது சங்ககால வேளிர் ஆண்ட ஊரை குறிக்கும் பொருளில் உள்ளது. இதில் வேள்ஊரை சார்ந்த பதவன் மகனாகிய அவ்வனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்ற பொருள் தருகிறது.

மூன்றாவது கல்வெட்டு



'கல்
பேடு தீயன் அந்தவன்
கூடல் ஊர் ஆகோள்'

என்றுள்ளது மூன்றாம் கல்வெட்டு. சங்கப்பாடலில் வரும் ஆநிரை கவர்தலே இங்கு 'ஆகோள்' என்று சுட்டப்படுகிறது.
கூடலூரில் நடந்த இவ்வாநிரை கவர்தல் போரில் உயிர்நீத்த பேடு தீயன் அந்தவன் என்ற வீரனுக்கு எடுப்பித்த நடுகல் இது.
இக்கல்வெட்டுகள் இன்று தமிழ்பல்கலைகழகத்தில் கல்வெட்டியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளன.

Friday, July 27, 2018

கல்வெட்டுக் கோயில்கள் - 2


திருக்கோடிக்காவல் கோவிலமைப்பு குறித்து சென்ற பதிவில் கண்டோம் இனி இக்கோவிலின் முக்கிய கல்வெட்டுச் செய்திகளைக் காண்போம்.

கல்வெட்டு 1:
கோயில் உண்ணாழிகைத் தென்புறச் சுவரிலுள்ள  பல்லவ மன்னன் நந்திவர்மரின் பத்தொன்பதாவது  ஆட்சியாண்டுக் கல்வெட்டு. (பழங்கல்வெட்டில் இருந்து படியெடுக்கப்பட்டது)
கல்வெட்டு அறிக்கை : (ARE.37 of 1931)
கல்வெட்டுச் செய்தி:
திருக்கோடிக்காவிலிருக்கும் சிறுநங்கை ஈஸ்வரம் எனும் கோவிலில் நுந்தா விளக்கெரிப்பதற்காக ஆழிற்சிறியன் என்பவன் மூலதனமாக வைத்த நூறு களம் நெல்லினை இக்கோயிலில் வழிபாடு நடத்தி வரும் ஆத்திரையன் நாராயணன் ஏறன் மற்றும் அவனது தம்பியர் மூவரும் பெற்றுக் கொண்டு அதில் வரும் வட்டியிலிருந்து விளக்கிற்கு உழக்கு நெய்யளிக்க ஏற்ற செய்தியை அறிகிறோம்.

கல்வெட்டு 2:
கோயில் முன்மண்டபத்தில் தென்புறம் அதிட்டானம், குமுதம், ஜெகதியில் உள்ள பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மரின் இருபத்தியிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு. (பழங்கல்வெட்டில் இருந்து படியெடுக்கப்பட்டது)
கல்வெட்டு அறிக்கை : (ARE.38 of 1931)
கல்வெட்டுச் செய்தி:
பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மரின் மனைவி  வீரமகாதேவியார் ஹிரண்யகர்ப்பம் மற்றும் துலாபாரம் என்ற இரு வேள்விகளைச் செய்து அதிலிருந்து திருக்கோடிக்கா மகாதேவர்க்கு அளித்த 50 கழஞ்சு பொன்னில் 25 கழஞ்சில் வரும் வட்டியிலிருந்து நாள்தோறும் இருநாழிகை அரிசியும் ஒரு பிடி நெய்யும் கொடுக்க வேண்டுமெனவும், நொந்தா விளக்கெரிக்க நாள்தோறும் உழக்கு நெய்யினை அளிக்க வேண்டுமெனவும் மேலும் இப்பணியை ஊர்ச் சபையார் நிறைவேற்றவும் பணிக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டின் மூலம் அறிகிறோம்.

கல்வெட்டு 3:
கோயில் உண்ணாழிகை மேற்குப்புற அதிட்டானத்தில் உள்ள முற்கால பாண்டியரான கோமாறஞ்சடையனின் நான்காம் ஆண்டு கல்வெட்டு.
கல்வெட்டு அறிக்கை :  (ARE.21 of 1930-31)
கல்வெட்டுச் செய்தி:
இக்கோவில் இறைவனுக்கு நந்தாவிளக்கு எரிக்க பேரையூர் நாட்டு பனையூர் அரையன் கள்வன் என்பவர் பதினைஞ்சு கழஞ்சு பொன்னளித்துள்ளார்.
இதற்கு வட்டியாக பிழையாநாழி என்ற நாழியின் அளவுப்படி உழக்கு நெய்யினை, திருக்கோடிக்கா நாராணக்க சதுர்வேதிமங்கல சபையார் கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

கல்வெட்டு 4:
கோயில் முன்மண்டபத்தில் தென்புறம் அதிட்டான ஜெகதியில் இளங்கோ முத்தரையரின் 13 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு.
கல்வெட்டு அறிக்கை : (ARE.38 of 1931)
கல்வெட்டுச் செய்தி:
இக்கல்வெட்டு சிதைந்துள்ளது. இம்முத்தரையரின் காலத்திலே நாட்டு மன்றாடிகள் 50 ஆடுகளும் வேறொருவர் 100 ஆடுகளும் இக்கோயிலிறைவனுக்கு விளக்கெரிக்க தானமாக அளித்த செய்தியைக் குறிக்கிறது.

Sunday, July 22, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 13

பொன்னியின் செல்வன் :

கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவல் பற்றி அறியாத வாசகர் வட்டமும், வரலாற்று ஆர்வலர்களும் அரிது.
அந்நாவலில் ராஜராஜசோழன் அவரது  இயற்பெயரான அருமொழி தேவன் என்ற பெயரில் வருவார். மேலும் அவருக்கு அந்நாவலில் பொன்னியின் செல்வன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

அந்நாவல் ஒரு புதினம் என்றாலும். அதில் சுட்டப்பெறும் பொன்னியின் செல்வன் என்ற சிறப்புப் பெயர் மக்களின் மனதில் நிலைகொண்டு விட்டது. ஆனால் அப்பெயர் அவரது கல்வெட்டுகளிலோ, செப்பேட்டிலோ எங்கும் குறிக்கப்படுவதில்லை. இவ்விஷயம் கல்கி அவர்களின் சுவைமிகு கற்பனை ஆகும்(?). ஆனால் இப்பெயருடன் தொடர்புடைய கல்வெட்டு ஒன்று திருவண்ணாமலை அருகே திருமலை என்ற ஊரிலுள்ளது. இவ்வூரிலே ராஜராஜரின் சகோதரி குந்தவை சமணர்களின் வழிபாட்டுக்காக அவரின் பெயரிலேயே ஏற்படுத்திக் கொடுத்த குந்தவை ஜீனாலயத்தில் தான் இவ்வரிய கல்வெட்டு உள்ளது. இக்கோவிலை பற்றி விரிவாய் பின்னொரு பதிவில் காண்போம்.

இனி இக்கல்வெட்டுச் சிறப்பினைக் காண்போம் :

இக்கல்வெட்டு அவரின் 21ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட பாடல் வடிவில் அமைந்த கல்வெட்டாகும். இதில் நந்தாவிளக்கு, சிற்பங்கள் அமைத்தவை குறித்த குறிப்புள்ளது. மேலும் கணிசேகரமரு பொற்சூரியன் என்பவர் இம்மலையின் இருபுறத்திலும் கலிங்கு அமைத்ததை கூறுகிறது. கல்வெட்டில் இம்மலை வைகைமலை என அழைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு வரிகளை காண்போம் :

அலைபுரியும் புனற்பொன்னி ஆறுடையசோழன்
அருண்மொழிக்கு யாண்டு யிருபத்தொன்றாவதென்றும்
கலைபுரியுமதி நிபுணன்   வெண்கிழான் கணிசே
கரமருபொற் சூரியன்நன் திருநாமத் தால்வாய்
நிலைநிற்கும் கலிங்கிட்டு நிமிர்வைகை மலைக்கு
நீடூழி இருமருங்கும் நெல்விளையக் கொண்டான்
கொலைபுரியும் படையரைசர் கொண்டாடும் பாதன்
குணவீர மாமுனிவன் குளிர்வைகை கோவே

இக்கல்வெட்டில் பொன்னியாருடைய சோழனும் வருகிறது அருமொழி என்ற ராசராசரின் இயற்பெயருமுள்ளது.
யார் கண்டது?  இக்கல்வெட்டு கூட கல்கிக்கு பொன்னியின் செல்வன் என்று பெயரிட ஊன்றுகோலாய் இருந்திருக்கலாம். இக்கல்வெட்டு நன்னிலையிலுள்ளது.

Friday, July 20, 2018

கல்வெட்டுக் கோயில்கள்-1

திருக்கோடிக்கா


தேவாரம் பாடப்பெற்ற காவிரி வடகரைத் தலங்களிலே 37 வது கோவிலாகிய திருக்கோடிக்காவானது மாயவரத்திலிருந்து கதிராமங்கலம் செல்லும் சாலையில் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் கல்வெட்டில் வடகரை பிரம்மதேயம் நல்லாற்றூர் நாட்டு திருக்கோடிக்காவாகிய கண்ணமங்கலம் என அழைக்கப்பட்டுள்ளது.

ஐந்துநிலை கோபுரம் கொண்ட அழகியத் திருக்கோவில். விமானம் திராவிட வகையினைச் சார்ந்தது. பிற்காலக் கட்டுமானத்தால் கோவில் தளம் உயர்த்தப்பட்டு அதிட்டானம்  மறைந்துள்ளது. மேலும் கருவறையைச்சுற்றிய பிற்கால கட்டுமான சுவற்றால் அங்குள்ள அழகிய கோட்டச் சிற்பங்களை முழுமையாக ரசிக்க முடியாத நிலையுள்ளது.

கோவிலின்  தென்புற சுவற்றில் காரைக்கால் அம்மையாருடன் மகளிர் ஒருவர் வணங்குவது போன்ற ஆடல்வல்லான்  சிற்பமுள்ளது,  தென்புறக் கோட்டத்தில் அழகிய ஆலமர் செல்வன் சிற்பம் அழகாக உள்ளது, பிற்காலச் சிலையின் ஆக்கிரமித்தல் காரணமாய் முன்னவர் மறைக்கப்பட்டுள்ளார்.
மேற்புறக் கோட்டத்தில் அடிமுடி காணா அண்ணல்  சிற்பமும், வடபுறக் கருவறைக் கோட்டத்தில் நான்முகன் சிற்பமும், வடபுற அர்த்தமண்டபக் கோட்டத்தில் அரிகண்ட, நவகண்ட வீரருடன் கூடிய கொற்றவைச் சிற்பமும் அழகாய் செதுக்கப்பட்டுள்ளன.

திருச்சக்கரப்பள்ளியில் உள்ளவாறு அரசமகளிர் ஈசனை வணங்குவது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டு முழுமையடையாது உள்ளது. (இக்கோவிலில் செம்பியன்மாதேவி திருப்பணி செய்ததாக கல்வெட்டுள்ளது. இச்சிற்பம் அவராகவும் இருக்கலாம்?)
வேதிபத்ர உபபீடத்தில் சிவபுராணம், இராமயண காட்சிகள் குறுஞ்சிற்பங்களாய் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டிய மகளிர், குடக்கூத்துச் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டுகளை பொருத்தமட்டில் மூன்றாம் நந்திவர்மன், நிருபதுங்கவர்மன், பராந்தகர், உத்தமசோழர், இராஜராஜசோழன், இராஜேந்திரர், விக்ரமசோழன், குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜர், கோமாறஞ்சடையன், கோவிளங்கோ முத்தரையர், காடவர் கோன் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுகள் என  இக்கோவிலில் மொத்தம் 48 கல்வெட்டுகள் உள்ளன. பல்லவர் காலம் தொடங்கி கோப்பெருஞ்சிங்கன் காலம் வரை இக்கோவில் மேன்மைபெற்று இருந்துள்ளது.

இக்கோவிலைப் பற்றியும், இறைவழிபாடு பற்றியும், நிலவிற்பனை, நிலவெல்லை பற்றியும் தெரிந்து கொள்ள இக்கோவிலின் கல்வெட்டுகள் பெரிதும் துணைபுரிகின்றன.
முதலாம் இராஜராஜர் காலத்தில் 'சூரியதேவர்' கோவிலொன்று இருந்தது தெரிய வருகிறது.

கல்வெட்டுகளில் சில பெயர்கள் தமிழ்ச்செறிவோடு காணப்படுகின்றன. உதாரணமாக 'பிழையாநாழி' என்றொரு அளவுக்கருவியும், 'புதுவாய்க்காலுக்கு நின்று போந்த உட்சிறுவாய்க்காலுக்கு கிழக்கு ' என்ற நில எல்லையும், 'தளி அர்ச்சிப்பான்' என்று கோவில் வழிபாடு செய்வோரும்,  'தீப்போர்க்குச் செம்பொன்' என்ற தீயில் புடம்போட்ட தங்கமும் குறிப்பிடபடுவது கருத்தைக் கவருவதாக உள்ளது.

இவ்வூரில் முன்பிருந்த பழமையான கோவிலை மாற்றி கற்கோவிலாக அமையப்பெற்ற போது முன்பு அக்கோவிலில் காணப்பட்ட கல்வெட்டுகளையெல்லாம் மீண்டும் புதிதாக அக்கோவிலில் கல்லில் வெட்டியிருப்பதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பண்டைய மக்கள் கல்வெட்டுகளை முக்கிய ஆவணங்களாக போற்றி பாதுகாத்ததை இதன்மூலம் உணரமுடிகிறது.

சிறு சிறு பகுதிகளாக அக்கல்வெட்டு செய்திகளை இனி காண்போம்.
தொடரும்.......

Wednesday, July 18, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 12

பல்லவராயன் பேட்டை சாசனம் தொடர்ச்சி :

பல்லவராயன் பேட்டையில் ராஜாதிராஜரின் 15ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று கிடைக்கிறது.
இதில் இரண்டாம் ராஜராஜனின் மெய்கீர்த்தியான 'பூமருவிய திருமாதும்' என்று தொடங்குகிறது. ஆய்வாளர்கள் இச்சாசனத்திற்கு இரண்டு கருத்துகளை கொடுத்தனர்.

முதலாவதாக இது இரண்டாம் ராஜராஜனே என்றும் தவறுதலாக இராஜாதிராஜர் என வெட்டப்பட்டுள்ளது எனக் கருதினர்.
இவ்வாதத்தினை ஏற்றால் இச்சாசனம் 1161ம் ஆண்டு எனக் கொள்ள வேண்டும்.
ஆனால் நேற்று நாம் கண்ட கல்வெட்டின்படி 1163ல் முடிசூடி 1166 ல் தான் இராஜாதிராஜன் என திருநாமம் சூடுகிறார்.
எனில் 1161 லே எப்படி இப்பெயரை எழுத முடியும்? மேலும் இக்கல்வெட்டில் 15ம் ஆட்சியாண்டு மிதுனமாதம் என்றுள்ளது. இதிலிருந்து இக்கல்வெட்டு 1180 ஜுன் மாதத்திற்கு உரியது என்றே கொள்ளுதல் பொருத்தமாகும். இதுவே அவனது இறுதிஆட்சியாண்டு கல்வெட்டாகும்.

இதிலிருந்து நாம் ஈண்டுகாண்பது என்னவெனில் 1166 ஐனவரியில் இராஜாதிராஜன் ஆட்சி ஏறினான்.சோழ நாட்டில் 14 வருடங்கள் முழுமையாக ஆட்சிபுரிந்தான். பின்னர் கி.பி 1178ல்  மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியேறிய பின் இருவரும் இணைந்து இரண்டு வருடம் ஆட்சி புரிந்தனர். பின் 1180 ஜுனிற்கு மேல் ஆந்திரா சென்று அங்கிருந்து நிலையாய் ஆட்சிபுரிந்தான் இராஜாதிராஜன்.
அவ்வகையில் இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது. பிரம்மாண்டமான பெரிய கற்றளி இன்று தன் பொலிவிழந்துள்ளது.
வரலாற்று ஆர்வலர்கள் இக்கோவிலையும் காணுதல் நலம்...

Tuesday, July 17, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 11

பல்லவராயன்பேட்டை சாசனம் :


மாயவரத்திலிருந்து நீடூர் செல்லும் சாலையில் பல்லவராயன்பேட்டை எனும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் முக்கியத்துவம் பெற்ற ஒரு கல்வெட்டு உள்ளது. இத்திருக்கோவில் இரண்டாம் ராஜராஜனின் பத்தாம் ஆட்சியாண்டில் அதாவது கி.பி1155ல் திருச்சிற்றம்பலமுடையானான பெருமாள்நம்பி பல்லவரையன் என்பவரால் எழுப்பப்பெற்றது. (ARE 1924 inscription no 434 & 435)

இன்றுநாம் காணஇருக்கும் கல்வெட்டுச் சாசனம் பெருமாள்நம்பி பல்லவரையன் இறந்தபின் அவரது மனைவியருக்கு 40 வேலி நிலம் தந்த செய்தியைச் சொல்வதோடு அவ்வரையன் இரண்டாம் இராஜாதிராஜனை அரசானக்கியமை மற்றும் ஈழப்போரில் பங்கேற்றமை குறித்தும் தகவலளிக்கிறது. அவ்வகையில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

துரதிருஷ்டவசமாக கல்வெட்டு நிறைய சிதைந்திருப்பினும் இக்கல்வெட்டின் 10,11,12 ஆகிய வரிகள் சிதையாமல் இருந்து முக்கியதகவலளிக்கிறது!
அதனை காண்போம்

10.வேண்டிப்புறத்து எல்லா அடைவு கேடுகளும்
வ(ராத) இடத்தில் இந்....லும் பரிகரித்து
இவ்....பெரியதேவர் எழுந்தரு(ளி) நாளிலே
திரு(அபி)ஷேகத்துக்குரிய பிள்ளைகள் இன்றியே....(ருக்கி)

11.றபடியை பார்த்து முன்னால் இருந்தபடியே வி....(செ)ய்து கங்கை (கொ)ண்ட சோழபுர ....தளி
இருக்கின்ற பிள்ளைகளை....யாணம் பண்ணு உடையார் விக்ரமசோழதேவர் பேரனார்

12.நெறியுடையபெருமான் திருமகனார் எதிரிலிப்பெருமாளை பெரி.....(சி)அருளின நாளிலே மண்டகவிபித்து....தார் ஆனவாரே இவரை திரு(அபி)ஷேகம் பண்ணுவிக்க கடவராக(து)
நாலாந்திருநக்ஷத்திரத்திலே ராஜாதிராஜ தேவர் என்று

13.திருஅபிஷேகம் பண்ணுவித்து  உடன் கூட்டமும் நாடும் ஒன்றுபட்டு  செல்லும்படி பண்ணு(வித்)து அருளினார்...

இச்சாசனத்திலிருந்து தெரியவருபவை, இரண்டாம் ராஜராஜனின் பிள்ளைகள் ஒருவயதும், இருவயதுமாக இருந்தது,
அந்தபுர மகளிரையும் மக்களையும் ஆயிரத்தளியிலிருந்து இராஜராஜபுரம் கொணர்ந்தது,
நாட்டாலும் உடன்கூட்டத்தாலும் ஏற்ப்பட்ட கலகத்தை நீக்கியது
இராஜராஜதேவர் எழுந்தருளிவித்து எதிரிலிப்பெருமாள் என்பவனை தேர்ந்தெடுத்து இராஜாதிராஜன் பெயரிட்டு அரசனாக முடிசூட்டியது
இவ்வனைத்து காரியத்திலும் பெருமாள்நம்பி பல்லவரையன் பங்கேற்றமை போன்றவைகளை இச்சாசனம் சுட்டிகாட்டுகிறது.
இதில் வரும் முன்னாளில் இருந்தது போலவே என்ற வரி ஆய்ந்து காணவேண்டியது. இதனை அதிராஜேந்திரன் இறந்தபின் குலோத்துங்கன் அரசுரிமை ஏற்றது போன்ற ஒன்றென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதில் வரும் எதிரிலிப்பெருமாள் விக்கிரமசோழனின் பேரனாக குறிப்பிடப்படுகிறார். மகன்வழியா? மகள்வழியா?  என தகவல் இல்லை.

இதுகுறித்தமேலும் ஒரு சுவையான விவாதத்தை அடுத்த பகுதியில் காண்போம்

Saturday, July 14, 2018

அறியப்படாத கோயில்கள் - 3

அல்லூர் நக்கன் கோவில்:

திருச்சி - கரூர் புறவழிச்சாலையில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள ஓர் ஊர் அல்லூர். ஊரின் முன்னே பஞ்சநதீஸ்வரர் ஆலயம் என்ற சோழர் கால கோவிலுள்ளது. நாம் காண இருக்கும் கோவிலானது இக்கோவிலைக் கடந்து இடப்புறமாக ஊரின் உள்ளே மேலும்  2கி.மீ சென்றால் ஊரின் ஒதுக்குபுறம் வயல்வெளிகளினிடையே அமையப்பெற்ற கோவிலாகும்.

பிரதோஷம், சிவராத்திரி தவிர மற்ற நாட்களில் ஈசனுக்கு அபிஷேகம் இல்லை. எந்நேரமும் கோவில் பூட்டியே இருக்கும்.
பாம்பு மற்றும் கதண்டு வண்டுகளின் தொல்லை உண்டு காண விரும்புவோர் கவனமாய் செல்லவும். இந்நாளில் பசுபதீஸ்வரர் என்றழைக்கப்படும் இக்கோவில் அந்நாளைய கல்வெட்டின்படி உறையூர் கூற்றத்து அல்லூரான அல்லூர் நக்கன் பரமேஸ்வரர் கோவில் என அழைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலிலுள்ள 17 ம் ஆட்சியாண்டு இராஜகேசரி முதலாம் ஆதித்தன் என கருதப்படுகிறார். மேலும் பராந்தகரின் 17,18,37,40,41ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் கிடைக்கின்றன.
இக்கல்வெட்டுகளில் கோவிலின் நிலதானங்கள், எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன. அரிஞ்சயர் கல்வெட்டில்  அவரது அதிகாரியான வீரசோழ இளங்கோவேள் என்கிற பராந்தக குஞ்சரமல்லன் குறிக்கப்படுகிறார். இவரின் மனைவி கங்கமாதேவியார் உடன்கட்டை ஏறி இறக்கிறார். இக்குறிப்புடன் இவர்  அளித்த 20 கழஞ்சு பொன் கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது. அரிஞ்சயரின் மற்றொரு கல்வெட்டில் மும்முடிசோழ இளங்கோவேளார் அளித்த தானம் குறிப்புள்ளது.

கண்டராதித்தரின் கல்வெட்டில் புதுக்குடி என்ற ஊரிலுள்ள நிலத்தினை இறையிலியாக அளித்த குறிப்பு வருகிறது.

மேலும் 'மதிரை கொண்ட ராஜகேசரி' சுந்தரசோழரின் 17ம் ஆட்சியாண்டு கல்வெட்டு அவர் அளித்த தானத்தினை குறிக்கிறது.

மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 24 ம் ஆண்டு கல்வெட்டில் இக்கோவில் இறைவன் நக்கீஸ்வரமுடைய நாயனார் என குறிக்கப்படுகிறார். இக்கோவில் ஏகதள கற்றளி அமைப்பை சார்ந்தது. கோவிலின் மகாமண்டபம் பிற்காலத்தியது. கோஷ்ட சிற்பங்கள் கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலின் வெளிபுறம் அருகேயுள்ள சிறுதெய்வ கோவிலில் பழமையான அய்யனார் சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது.

Friday, July 13, 2018

தொல்லியல் எச்சங்கள் - 4


புதுக்கோட்டையிலிருந்து பொன்னமரவாதி செல்லும் வழியில் சுமார் 28 கி.மீ தொலைவில் தேனிமலை என்னும் ஒரு பெரிய மலைக்குன்று அமைந்துள்ளது. இங்கே  சமணர் புடைப்புச்சிற்பங்களும், சைவம் சார்ந்த சிறிய புடைப்பு சிற்பங்களும் பாறையில் குடையப்பட்டுள்ளன.

சமணர் சிற்பம் அமைந்த பாறைக்குச் செல்லும் வழியில் இடப்புறம் காணும் சிறுபாறையிலுள்ள பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று இம்மலையை தேனூர்மலை எனக் குறிக்கிறது. மேலும் இம்மலையில்  மலையத்துவஜன் என்னும் சமணமுனிவர் தவம்புரிந்த பொழுது,  இருக்குவேளிர் மரபினைச்சேர்ந்த மன்னன் ஒருவன் இங்கு வந்து தங்கி, இங்கு தவம்புரிந்த சமணமுனிவர்களுக்கு பள்ளிச்சந்தம் கொடுத்த செய்தியை இந்த கல்வெட்டு எடுத்துரைக்கின்றது. இக்கல்வெட்டு இன்று எளிதில் அறியாவண்ணம் முட்புதர்களால் சூழப்பட்டுள்ளது,

தீர்த்தங்கரர் சிற்பங்கள் வெட்டப்பட்டிருக்கும் பாறையில் அவைகளுக்கு அருகே  தேன்கூடுகள் பெரிதாய் உள்ளன. கவனமாய்தான் இங்கு இவ்வரிய பொக்கிஷங்களைக் காண வேண்டியுள்ளது. சமணத்திருமேனிக்கு கீழே
ஸ்வஸ்திஸ்ரீ  ஸ்ரீவல்ல உதன செருவொட்டி
செய்வித்த திருமேனி '
என்ற கல்வெட்டும் காணப்படுகிறது!

இப்பாறைகளுக்கு பின்புறம் நடந்து சென்றால் பிற்காலத்திய இடும்பன், பிள்ளையார், சைவஅடியார் சிலைக புடைப்புகளாய் செதுக்கப்பட்டுள்ளன.




Thursday, July 12, 2018

அறியப்படாத கோயில்கள் - 2


திருச்சிக்கு தெற்கே சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் அழுந்தூர். இவ்வூரில் வரகுணஈஸ்வரம் என்ற பழம்சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுகள் இவ்வூரை அழிந்தியூர் என்றே குறிக்கிறது. முற்கால பாண்டியர் பெயரால் அழைக்கப்பட்ட இக்கோவில் கல்வெட்டுகள் சமீபத்தில் தமிழ் பல்கலைக் கழத்தினரால் படியெடுக்கப்பட்டது.

அங்குள்ள முதல்குலோத்துங்கனின் 48 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு இவ்வூரை 'இரட்டபாடி கொண்ட சோழவளநாட்டு உறத்தூர் கூற்றத்து திருஅழிந்தியூர் ' என குறிக்கிறது. மேலும் மாறவர்மன் குலசேகரனின் 38ம் ஆண்டு கல்வெட்டில் இவ்வூரானது 'வடகோனாட்டு அழிந்தியூர்' என குறிக்கப்படுகிறது. மற்றொரு கல்வெட்டில் அவ்வூரில் வாழ்ந்த காடையன் வலையன் குற்றிச்சேந்தன் ஆன பெரியநாட்டு முத்தரையன் அவ்வூருக்கு உரிமையுடைய காணியாளனாக குறிக்கப்படுகிறான்.

இதுவரையில் முத்தரையர்கள் போரில் பகைவரை வென்ற இடங்களில் ஒன்றாகிய அழிந்தியூர் என்ற  ஊரினை தஞ்சை மாவட்டத்திலுள்ள 'தேரழுந்தூர்' எனக் கொண்டிருந்தனர் (இதை ராகவையங்கார் எழுதியுள்ளார்). இந்நாளில் அக்கருத்து மாறுபட்டுள்ளது. அழுந்தூர் வேறு அழிந்தியூர் வேறு என்றும், இக்கோவில் கல்வெட்டுகளில் தெளிவாகக் குறிப்பிடப்படும்  இத்திருஅழிந்தியூரே போர் புரிந்த ஊராக  இருக்க வேண்டுமென்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தற்சமயம் சில உள்ளூர் கொடையாளர்களால் இக்கோவில் பராமரிக்கப்படுகிறது.






Wednesday, July 4, 2018

அறியப்படாத கோயில்கள்-1

திருச்சி -மதுரை புறவழிச்சாலையில் விராலிமலையிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் விராலூர். புறவழிச்சாயிலிருந்து இடதுபுறம் சென்றால் சிறிது தொலைவில் இவ்வழகிய கற்றளி அமைந்துள்ளது.

இக்கற்றளி முற்கால சோழர் கலைப்பாணியை கொண்டுள்ளது. நார்த்தாமலையிலுள்ளதை போல வேசரம் வகை விமான அமைப்பை கொண்ட அரிய கற்றளி.

இக்கோவிலில் கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை. காலப்போக்கில் சிதைந்திருக்கும்.

சில சிலைகள் கோஷ்டத்திலும், பல அரிய சிலைகள் திறந்தவெளியிலும் உள்ளன. அரசின் நிதியுதவி பெற்று தற்சமயம் ஒருகால பூஜை நடைபெற்று வருகிறது. மற்ற நேரங்களில் கோவிலானது பூட்டியே கிடக்கிறது.  இறைவன் பூமிநாதர் என அழைக்கப்படுகிறார்.

கட்டிடக்கலை பற்றி அறிய விழையும் மாணவர்கள், மரபுநடை பயணங்கள் செல்லும் ஆர்வலர்கள், இக்கோவிலையும் அவசியம் காணவேண்டும்.